|
பிரம்மாவிற்கு சனகர், சனாதனர், சனந்தனர், சனத்குமாரர் ஆகிய நான்கு பிள்ளைகள். இவர்கள் நான்கு வேதம், ஆறுசாஸ்திரம், 64 கலைகள், 96 தத்துவங்கள், ஆகமங்கள், உபநிஷத் துக்களைக் கற்றுத் தேர்ந்தனர். இவ்வளவு படித்தும் அவர்களுக்கு மனநிறைவு கிடைக்க வில்லை. கயிலைக்கு சென்று சிவபெருமானை வழிபாடு செய்தனர். சிவன் அவர்கள் முன் தோன்றி, இன்னும் என்ன வேண்டும், எனக் கேட்டார்.எவ்வளவு படித்தும் அமைதியில்லை. மனம் அமைதி பெற அருள்புரிய வேண்டும் என்றனர். அதற்கு சிவன்,படிப்போ, பொருளோ மன அமைதியைத் தராது, என்றவர் மூன்று விரலை உயர்த்தி, சுட்டு விரலை பெருவிரலோடு சேர்த்து (சின்முத்திரை) அமைதியாக அமர்ந்தார். இந்த சின்முத்திரையின் பொருள் தெரியுமா?ஆணவத்தை ஒடுக்குதல், பாவம், புண்ணியம் இவற்றால் சேரும்வினைகளை இறைவனிடமே அர்ப்பணித்தல், இந்த உலக வாழ்வு நிரந்தரமானது என்ற எண்ணத்தை விடுதல் ஆகியவற்றை விரித்த 3 விரல்கள் காட்டுகின்றன.சுட்டுவிரல் உலக உயிர்களான நம்மையும், பெருவிரல் பரமாத்மாவான இறைவனையும் குறிக்கிறது. முதல் மூன்றையும் நம் கட்டுக்குள் கொண்டு வந்தால், நாம் இறைவனை அடைந்து விடலாம் என்பதே இந்த முத்திரையின் விளக்கம். சின்முத்திரையுடன் சிவன் தோன்றுவதையே தட்சிணாமூர்த்தி வடிவமாக வணங்குகிறோம்.
|
|
|
|