|
ஜமீன்தார் ஒருவர், தன் நண்பரைச் சந்தித்துவிட்டு வண்டியில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். காட்டுப்பாதையில் வண்டி பழுதானது. ஒரு தச்சுக்கூடத்திற்கு வண்டியை ஒரு வழியாகக் கொண்டு வந்து சேர்த்தார். அங்கே தச்சர் ஒருவர் இருந்தார். சக்கரம் பழுதாகி விட்டது. அவசரமாக ஊர் போக வேண்டும். சீக்கிரம் பழுது பாருங்கள் என்றார் அதிகாரத்துடன். ஐயா! வேலையாட்கள் அவசரமாக வெளியூர் சென்று விட்டனர். துருத்தி போடுவதற்கு ஆள் யாருமில்லை. நான் மட்டுமே இருக்கிறேன் என்றார் தச்சர் தயக்கமுடன். சரி! வேண்டுமானால் நான் துருத்தி போடுகிறேன். சீக்கிரமாக வேலையை ஆரம்பியுங்கள் என்று தேவைக்காக இறங்கி வந்தார் ஜமீன்தார். வேலை செய்ய ஆரம்பித்ததும், ஜமீன்தார் உடலில் வியர்வை பெருகியது. அங்க வஸ்திரத்தால் துடைத்துக் கொண்டார். சிறிது நேரத்தில் சக்கரம் சரி செய்யப்பட்டு, வண்டியில் பூட்டப்பட்டது. தன் உழைப்பில் வண்டி தயார் ஆனதைக் கண்ட ஜமீன்தாருக்கு இனம் புரியாத மகிழ்ச்சி உண்டானது. தச்சரிடம், என்ன கூலி கேட்கிறீர்கள்? என்று கேட்டார்.வழக்கமாக ஒரு வெள்ளிப்பணம் கேட்பேன் என்றார் தச்சர். பையில் துழாவிய ஜமீன்தார் ஒரு தங்கக்காசை எடுத்து நீட்டினார். ஆச்சரியப்பட்ட தச்சரிடம், இது வேலைக்கான கூலி இல்லை. பணத்தால் கிடைக்கும் மகிழ்ச்சியை விட, உழைப்பால் கிடைக்கும் மகிழ்ச்சி உன்னதமானது என்பதை கற்றுக் கொடுத்தீர்களே! அதற்கான குருதட்சணை, என்றார். |
|
|
|