|
திருச்செந்தூர் முருகன் கோயில் மடப்பள்ளியில் சுவாமிக்கு நைவேத்யம் தயாரிக்கும் பணியில் முதியவர் ஒருவர் ஈடுபட்டிருந்தார். வயது முதிர்வின் காரணமாக சரியான நேரத்திற்கு உணவு தயாரித்து தரமுடியவில்லை. அர்ச்சகர்கள் அவர் மீது கோபம் கொண்டு கத்துவார்கள். முதியவர், முருகனிடம் தன் நிலை குறித்து புலம்பினார்.ஒருநாள், அவர் மிகவும்தாமதமாக உணவு சமைத்து கொடுக்கவே, ஒரு அர்ச்சகர் கோபத்தில் அவரைகடுமையாகத் திட்டிவிட்டார். மனம் வருந்திய முதியவர், தன் உயிரை மாய்த்து விட எண்ணி கடலுக்குள் இறங்கினார்.நீண்ட தூரம் கடலுக்குள் நடந்தும் கூட, நீர்மட்டம்,அவரது முழங்காலுக்கு மேல் கொஞ்சம்கூட ஏறவில்லை. சற்று தூரம் சென்றதும், நில்லுங்கள்! என்று ஒரு குரல் கேட்டது. முதியவர் திரும்பிப் பார்த்தபோது, ஒரு சிறுவன் பின்னால் நின்றான். அவன் முதியவரிடம், உயிரை விடும் அளவிற்கு அப்படியென்ன கஷ்டம் வந்தது? என்றான். முதியவர் அவனிடம், தன் பிரச்னையை சொன்னார்.
சிறுவன் சிரித்தான்.உங்களுக்கு வேறு பணி இருக்கும் போது, எதற்காக மடப்பள்ளியில் வேலைபார்க்கிறீர்கள்? திருச்செந்தூரில் பல காலமாக இருக்கும் நீங்கள், இந்த தலத்தின் வரலாறை எழுதினால் என்ன? என்றான். கல்வியறிவு இல்லாத எனக்கு அது எப்படி சாத்தியம்? என்றார் முதியவர். அதெல்லாம் இல்லை. நீங்கள் தலபுராணம் எழுத வேண்டுமென செந்தில் ஆண்டவன் விரும்புகிறான். அதற்கான ஊதியமும் உண்டு, என்று சொல்லி ஒரு பணமுடிப்பைக் கொடுத்தான். முதியவர் புரியாமல் நின்றார்.அப்போது, அந்தச் சிறுவன் அழகே வடிவான செந்தில் வேலனாக அவருக்கு சுயரூபம் காட்டி மறைந்தார்.மகிழ்ச்சியடைந்த முதியவர், கிருஷ்ண சாஸ்திரிஎன்பவரிடம் தல புராணத்தை கேட்டார். அதனை நுõலாக எழுதினார். அதனை அரங்கேற்ற கோயிலுக்கு சென்றார். முருகன் சொல்லியபடி நுõல் இயற்றியதை அர்ச்சகர்களிடம் கூறினார். யாரும் அதை நம்பவில்லை. அவரை கேலி செய்து விரட்டினர்.கோயிலை விட்டு வெளியேறிய முதியவர், தான் இயற்றிய நுõலை கடலில் வீசி விட்டார். அடுத்த ஊரில் கரை ஒதுங்கிய அந்த புத்தகம் அங்கு வசித்த அறிஞர்ஒருவரிடம் சிக்கியது. அதனை படித்துப் பார்த்த அவர் வியப்படைந்து, அந்நுõலை கோயிலுக்கு கொண்டு சென்று படித்துக் காட்டினார். முதியவரை வரவழைத்து மன்னிப்பு கேட்டனர். முருகன் முன்னிலையில் தல புராண அரங்கேற்றம் சிறப்பாக நடந்தது. அவரே வென்றிமாலை கவிராசர் என போற்றப்பட்டார்.
|
|
|
|