|
ஒரு கிராமத்தில்இருந்த முருகன் கோவில் நந்தவனத்தில், முருகனின் அடியவர் ஒருவர் தங்கியிருந்தார். அவ்வூரை சேர்ந்த நண்பர்கள் இருவர் அவரைக் கேலி செய்வார்கள். அடியார் அதைக் கண்டு கொள்ளவில்லை.ஆத்திரமடைந்த அவர்கள்,அடியவரை எப்படியாவது கோபப்படுத்த முயற்சித்தனர். அதற்காக,இருவரும் தமக்குள் சண்டையிடுவதுபோல் நடித்தனர். ஒருவருக்கொருவர் பலமாகத் தாக்குவது போல் பாவ்லா செய்தனர்.பின் நீதி கேட்டு மன்னனிடம் சென்றனர். மன்னன், உங்கள் சண்டையை நேரில் கண்ட சாட்சி யார் எனக் கேட்டான். முருகன் கோவிலில் தியானத்தில் அமர்ந்திருக்கும் அடியாரே நேரில் கண்ட ஒரே சாட்சி. அவர் தான் எங்கள் சண்டைக்கே காரணமாக இருந்தார், என்றனர்.சாமியார் சபைக்கு அழைத்து வரப்பட்டார். மன்னன்அவரிடம், நந்தவனத்தில் நடந்தது என்ன? எனக் கேட்டான். அதற்கு அடியவர், முருகனும் முருகனும்என்னிடம் வம்பு இழுத்தனர். முருகனும் முருகனும் தாக்கிக் கொண்டனர், என்று சம்பந்தமில்லாமல் பதிலளித்தார்.மன்னனுக்கு அதுபுரியவில்லை.அங்கிருந்த அமைச்சர்,மன்னா! இவர் தீவிர முருக பக்தர். இவரால் தான் சண்டை வந்தது என்று நண்பர்கள் சொல்வது பொய். இதுபற்றி நான் ஒற்றர்கள் மூலம்ஏற்கனவே விசாரித்து விட்டேன். எல்லாவற்றையும் முருகனின் செயலாகவும், எல்லாரையும் முருகனாகவும் பார்க்கும் இவர், இவர்கள் தம்மிடம் வம்பு செய்ததையும், மாறி மாறி அடித்துக்கொண்டதையும் முருகனின் செயலாகவே கண்டிருக்கிறார். அதனால் தான் தங்களிடம் அப்படி சொன்னார், என்றார். அடியவர் மீது பழி சுமத்திய நண்பர்களுக்கு மன்னர் சிறை தண்டனை விதித்தார். ஆனால், அடியவர் அவர்களை மன்னிக்கும்படி வேண்டவே மன்னர் விடுவித்தார். |
|
|
|