|
குரு ஒருவர் புதிதாய்ச் சேர்ந்த சீடர்களுக்கு முதல் நாள் பாடமாக அறம் செய விரும்பு என்ற ஆத்திசூடியைச் சொல்லி, தருமத்தை ஒவ்வொருவரும் விருப்பத்துடன் செய்ய முயல வேண்டும் என்பதுதான் அதன் பொருள் என்று விளக்கினார். சீடர்கள் யாவரும் தலையாட்ட ஒரு சீடன் மட்டும் ஆசிரமத்தை விட்டு வெளியேறினான். சரியாக ஓர் ஆண்டு கழிந்தபின், மீண்டும் அவன் குருவிடம் வந்தான். ஸ்வாமி! அடுத்த பாடத்தைக் கூறுங்கள் நான் படிக்கவேண்டும் என்றான். திடுக்கிட்ட குரு என்ன, அடுத்த பாடமா? உன்னுடன் படித்தவர்கள் எல்லாம் ஆத்திசூடி முழுவதையும் படித்துவிட்டனர் இப்பொழுது வந்து அடுத்த பாடம் நடத்துங்கள் என்கிறாயே... ஓராண்டாக நீ என்ன செய்தாய்? எனக் கேட்டார். குருவே! தாங்கள் அறம்செய விரும்பு! என்று சொல்லிக் கொடுத்தீர்கள். அறத்தைச் செய்ய என் உள்ளத்தில் விருப்பம் ஏற்பட ஓராண்டாய் பயிற்சி எடுத்துக் கொண்டேன். இப்பொழுது உண்மையிலேயே நான் அறத்தைச் செய்ய விருப்பத்துடன் உள்ளேன் ஆகவே அடுத்த பாடத்தைக் கேட்க வந்தேன் என்றான். குரு அவனைக் கட்டித் தழுவி ஆசிர்வதித்தார். |
|
|
|