|
அரபு நாட்டை விரோச்சன் என்ற அரசர் ஆண்டு வந்தார். அவருக்கு நம்பிக்கையான தூதர் ஒருவர் தேவைப்பட்டார். "அறிவு நிரம்பியவனாகவும், பொறுப்பு உள்ளவனாகவும் தூதர் இருக்க வேண்டும். அப்படிப்பட்டவனை எப்படிக் கண்டுபிடிப்பது என்று சிந்தித்தார். அரண்மனையில் நீண்ட காலம் பணி புரிந்த நான்கு பேர் அரசரிடம் வந்தனர். ""அரசே! தூதன் வேலையை எங்களுக்குத் தர வேண்டும், என்று வேண்டினர். ""எனக்குத் தூதர் ஒருவர்தான் தேவை. சோதனை வைத்து உங்களில் ஒருவரைத் தேர்ந்து எடுக்கிறேன், என்றார் அரசர். ""என்ன சோதனை? என்று அவர்கள் ஆர்வத்துடன் கேட்டனர். ""நீங்கள் யாரும் தலை நகரத்தை விட்டு வெளியே சென்றது இல்லை. உங்கள் ஒவ்வொருவருக்கும் நான் ஓர் ஓலை தருகிறேன். நீங்கள் மதுரைக்குச் சென்று நம் தூதரிடம் அந்த ஓலையைத் தர வேண்டும். அவர் தரும் பதில் ஓலையை வாங்கி வர வேண்டும். ""மதுரைக்கு எப்படிச் செல்வது என்பது உங்களுக்குத் தெரியாது. தலை நகரத்தில் இருந்து வடக்கே செல்லும் சாலையில் பத்துக் கல் செல்லுங்கள். நான்கு சாலை சந்திப்பு வரும்.
""அதில் ஒரு சாலை மதுரைக்குச் செல்லும்; இன்னொரு சாலை கருவூருக்குச் செல்லும்; மற்றொரு சாலை காஞ்சிக்குச் செல்லும். வழி கண்டுபிடிப்பதில் உங்களுக்கு எந்த தொல்லையும் இருக்காது. ""அங்கே கை காட்டி மரம் இருக்கும். அது எந்த ஊருக்கு எப்படிச் செல்ல வேண்டும் என்று காட்டும். இப்போதே செல்லுங்கள். பதில் ஓலையுடன் விரைவில் திரும்புங்கள், என்றான் அரசர். ஓலையுடன் அவர்கள் நால்வரும் தங்கள் குதிரையில் அமர்ந்து வேகமாகச் சென்றனர். நான்கு சாலை சந்திப்பு வந்தது. கை காட்டி மரத்தைப் பார்த்த அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கை காட்டி மரத்தின் அடிப்பகுதி வெட்டப்பட்டு கைகாட்டி மரம் சாய்ந்து கிடந்தது. இதைப் பார்த்த அவர்களுக்கு எப்படி வழி கண்டுபிடிப்பது என்று புரியவில்லை. அவர்களில் ஒருவன் மட்டும் கன்னத்தில் கை வைத்தபடி சிந்தனையில் ஆழ்ந்தான். மற்ற மூவரும் ஒன்றாக அமர்ந்தனர். ""நான்கு சாலைகளுள் ஒன்று நாம் வந்த சாலை. மற்ற மூன்று சாலைகளுள் ஒன்றுதான் மதுரைக்குச் செல்லும் சாலை. மற்ற மூன்று சாலைகளில் நாம் மூவரும் பிரிந்து செல்வோம். யாருக்கு நல்ல வாய்ப்பு உள்ளதோ அவர் மதுரையை அடையட்டும். ஓலை பெற்றுத் திரும்பட்டும், என்றான் அவர்களில் ஒருவன். அவர்கள் மூவரும் மூன்று சாலைகளில் விரைந்து சென்றனர். சிந்தித்துக் கொண்டிருந்த அவனுக்கு நல்ல வழி ஒன்று தோன்றியது. கீழே கிடந்த கை காட்டி மரத்தை நன்கு கவனித்தான்.
ஏதோ முடிவுக்கு வந்தவனாகத் தன் குதிரையில் ஏறி அமர்ந்தான். ஒரு சாலையில் அதை வேகமாக விரட்டினான். என்ன வியப்பு! அவன் மதுரையை அடைந்தான். தூதரிடம் ஒலை பெற்றுத் தலை நகரம் திரும்பினான். ஓலையுடன் வந்திருந்த இருவரும் அரசனை வணங்கினார். ஓலையைத் தந்தனர். ""எப்படி வழி கண்டுபிடித்தீர்கள்? என்று கேட்டார் அரசர். மதுரைக்குத் தான் குருட்டாம்போக்காக வழி கண்டுபிடித்ததைச் சொன்னான் முதலாமவன். ""உன்னைப் போன்ற முட்டாளுக்கு இங்கே வேலை இல்லை, என்று அவனை விரட்டினார் அரசர். மதுரைக்கு வழி கண்டுபிடித்த முறையை விளக்கமாகச் சொன்னான் இரண்டாமவன். அவன் அறிவுக் கூர்மையை பாராட்டிய அரசர், இன்றே தூதராக வேலையில் சேர்ந்துவிடு, என்றார். அப்படியானால் இரண்டாமவன் மதுரைக்கு எப்படி வழி கண்டுபிடித்து இருப்பான்?
விடை: தரையில் கிடந்த கை காட்டி மரத்தைத் தூக்கி நிற்க வைத்தான் அவன். தலை நகரத்தின் பெயரைக் காட்டும் பலகையை, தான் வந்த சாலையைப் பார்க்குமாறு கை காட்டியின் அடி மரத்தைத் திருப்பினான். கை காட்டி மரத்தில் மதுரை என்ற பெயர் எழுதிய பலகை மதுரை செல்லும் சாலையைக் காட்டியது. அந்தச் சாலை வழியே சென்று மதுரையை அடைந்தான் அவன். |
|
|
|