|
ஆதியில் தேவலோகத்தில் சிவன் ஆடியது ஆனந்தத் தாண்டவம். பின்னர், ஆதிசேஷனாகிய பதஞ்சலி முனிவர், வியாக்ரபாதர் எனும் புலிக்கால் முனிவர் என்ற இருவரின் தவப்பயனாய் ஆனந்தத் தாண்டவத்தை ஆடி அருளினார். இது நடந்தது தில்லையில் (சிதம்பரத்தில்). தேவலோகத்தில் ஆடியபோது, அதைக் காண சனீஸ்வரனுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஒரு காலத்தில் கைலாய மலை சனீஸ்வரனுக்கு சொந்தமாயிருந்தது. அப்பொழுது சிவபெருமான் சனீஸ்வரனிடம் இந்த மலையில் நாங்கள் வசிக்கப் போகிறோம். ஆனால், மாளிகைகள் எதுவும் அங்கு அமைக்க மாட்டேன். அப்படி அமைத்தால் நீயாகவே அதனை இடித்து விடலாம் என்று ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டார். இந்நிலையில் பார்வதி தேவி, ஏகாந்தமாய் இருக்க ஒரு மாளிகை இருந்தால் நல்லது என எண்ணினாள். உடனே, தேவசிற்பி விசுவகர்மாவை அழைத்து மாளிகை அமைக்கச் செய்து விட்டாள். கண நேரத்தில் மாளிகை உருவானதைக் கண்டு சிவன், பார்வதியைக் கேட்டார். சிவபெருமான், சனியிடம் செய்து கொண்ட ஒப்பந்தம் அவளுக்குத் தெரியாது. இப்பொழுது சிவன் அதனை விளக்கினார். அதற்கு பார்வதி, அதனாலென்ன? சனீஸ்வரன் தங்களின் பக்தன் தானே. தாங்கள் சொன்னால் கேட்பானே. அப்படி அவன் மறுத்துவிட்டால், நீங்கள் அங்கிருந்து டமருக(உடுக்கை) ஒலி ஒழுப்புங்கள். அந்த ஒலி கேட்டதும் மாளிகையை நானே இடித்து விடுகிறேன் என்றாள்.
சிவனும் சனீஸ்வரனை சந்தித்து பார்வதியின் விருப்பத்தைச் சொன்னார். அப்பொழுது சனியும் அதற்கு உடன்பட்டு மாளிகையை இடிப்பதில்லை என்று உறுதி அளித்தான். அத்துடன் எனது மனக்குறை ஒன்றை தாங்கள் போக்கியருள வேண்டும் என்றான். என்ன? சொல்? என்றார் ஈசன். முன்பு தாங்கள் ஆனந்தத் தாண்டவம் ஆடியதை நான் காணவிடாமல் தடுத்து விட்டனர். தற்பொழுது அடியேனுக்காக தங்களின் டமருக ஒலியே தாளமாகக் கொண்டு அதை ஆடியருள வேண்டும் என்றான். கருணாமூர்த்தியும் உடனே ஆட ஆரம்பித்து விட்டார். டமருகம் ஒலித்தது. அந்த ஒலி பார்வதிக்குக் கேட்டது. அவள் உடனே மாளிகையை இடித்து விட்டாள்! சிவபெருமானின் ஒப்பந்தமும் நிறைவேறியது; சனீஸ்வரனும் ஆனந்தத் தாண்டவத்தைக் கண்டு களித்தார். |
|
|
|