|
தெய்வ அனுக்கிரகம், தெய்வ தரிசனம், தெய்வ அனுபவம் சுலபத்தில் கிடைத்து விடாது. உத்தமர்களின் உறவும், அவர்களுடைய அருளும் இருந்தால் தான், தெய்வத்தை உணர முடியும் என்பதை உணர்த்தும் கதை இது! ராவண சம்ஹாரம் முடிந்து, ஸ்ரீ சீதா - ராம பட்டாபிஷேகம் நடந்த பின், அசுவமேத யாகம் செய்யத் தீர்மானித்தார் ஸ்ரீராமர். அலங்கரிக்கப்பட்ட குதிரை முன்னே செல்ல, சத்ருக்னன், புஷ்கரன் மற்றும் ஆஞ்சநேயர் பின் தொடர்ந்தனர். துக்கராங்கம் எனும் நகரில் நுழைந்தது குதிரை. அந்நகரத்து இளவரசனான தமனன், குதிரையை பிடித்துக் கட்டினான். இதனால், கடும் போர் மூண்டது. பரதன் மகன் புஷ்கரனின் அம்பினால் அடிபட்ட தமனன், மூர்ச்சையடைந்து கீழே விழுந்தான். இதை அறிந்த மன்னன் சுபாகு, தன் மகனை கீழே தள்ளியவர்களை பழி வாங்க, பெரும் படையுடன் போர்க்களம் புகுந்தான். போர்க்களத்தில், அவன் எய்த அத்தனை அம்புகளையும் எதிர் கொண்ட ஆஞ்சநேயர், ஜெய் சீதாராம்... என்று கூறியபடியே, ஆகாயத்தில் எழும்பி, சுபாகுவின் நெஞ்சை, தன் நெஞ்சால் இடித்து, அவனை கீழே தள்ளினார்.
மூர்ச்சையாகிக் கீழே விழுந்த சுபாகுக்கு, கனவைப் போல ஒரு அதிசய காட்சி தெரிந்தது. அயோத்தியில் பெரிய யாக குண்டம்; வசிஷ்டர், வாமதேவர், ஜாபாலி மற்றும் சியவனர் முதலான மகரிஷிகள் எல்லாம் சூழ்ந்திருக்க, யாகத்திற்காக சங்கல்பம் செய்து கொண்டிருந்தார் ஸ்ரீராமர். ஆகாயத்தில், பிரம்மா முதலான தேவாதி தேவர்கள் எல்லாம் ஸ்ரீராமரை துதித்தபடி இருந்தனர். கனவு கலைந்தது; திடுக்கிட்ட சுபாகு, ஆகா... நான் எதிர்க்கும் இந்த சேனை, மகாவிஷ்ணுவின் அவதாரமும், என் பக்திக்கு உகந்தவருமான ஸ்ரீராமருடையது. ஸ்ரீராமரே பரப்பிரம்மம் என்ற எண்ணத்தை கை விட்டு, நான் ஏன் ராம பக்தர்களை எதிர்த்தேன்... என நினைத்து எழுந்த சுபாகு, உடனே, போரை நிறுத்தும்படி தன் வீரர்களுக்கு கட்டளை இட்டான். அதேசமயம், அவனுக்கு பல ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம் ஒன்று நினைவுக்கு வந்தது.
அது.. தீர்த்த யாத்திரை செய்தபடி சுபாகு வந்து கொண்டிருந்த போது, அசிதாங்கர் என்ற ரிஷி, ராம நாமத்தை உச்சரித்தபடி இருப்பதைப் பார்த்தான். அவரிடம் அதுபற்றி கேட்க, அவர், உன் இஷ்ட தெய்வமான நாராயணனே தற்போது ராமர் என்ற பெயரில் அயோத்தியில் இருக்கிறார். அவரை எண்ணி ஜபம் செய்கிறேன்... என்றார். சுபாகு சிரித்துக் கொண்டே, என்ன இது... ராமனும், என்னைப் போல் ஒரு அரசன் தானே... காட்டில் அலைந்து திரிந்து, மனைவியை தேடிய அவனைப் போய் நாராயணன் என்கிறீர்களே... என, எகத்தாளமாய் பேசினான். அசிதாங்கர் வருந்தியபடியே, சுபாகு... தக்க சமயம் வரும்போது உனக்குப் புரியும்... என்றார். அதன்படியே, தன்மீது, ஆஞ்சநேயர் தன் நெஞ்சால் மோதியவுடன், தனக்கு ராமரை பற்றிய உண்மை புரிந்தது என தெளிந்தான் சுபாகு. அதன்பின், ஸ்ரீராமருடைய யாகத்தில் கலந்து, அவரை தரிசித்து நன்னிலை பெற்றான். நல்லவர்களின் உறவை வேண்டுவோம்; பிடித்திருக்கும் துயரங்களைத் தாண்டுவோம்! |
|
|
|