|
ஒரு வியாபாரியிடம் அபூர்வ ஜாதிக் குதிரை ஒன்று இருந்தது. அதை வாங்க நிறையச் செல்வந்தர்களும், அரசர்களும், விரும்பினர். ஆனால், அவன் அதை விற்க மறுத்து விட்டான். திடீரென்று ஒரு நாள் அந்தக் குதிரை காணாமல் போனது. ஊரார் அவன் மீது அனுதாபப்பட்டனர். அதற்கு அந்த வியாபாரி. இப்போதைக்கு குதிரைலாயத்தில் இல்லை என்பது நிஜம். பின்னால் என்ன நடக்கும் என்பது நமக்குத் தெரியாது! அதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்றான். ஒரு வாரம் கழித்து அவனது அபூர்வ ஜாதிக் குதிரை காட்டிலிருந்து இன்னும் பத்து குதிரைகளை தன்னுடன் அழைத்து வந்தது. மறுபடியும் ஊரார் வியாபாரியின் அதிர்ஷ்டத்தைப் புகழ்ந்தனர். அப்போது வியாபாரி, என் குதிரை பத்துக் குதிரைகளை அழைத்து வந்திருக்கிறது. என்பது உண்மைதான் ஆனால், நாளை என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். என்றான்.
அடுத்த நாள், வியாபாரியின் மகன் ஒரு குதிரையைப் பழக்க முயற்சித்துக் கீழே விழுந்து கால் எலும்பு முறிந்து விட்டது. மறுபடியும் ஊரார், அந்த தரித்திரம் பிடித்த குதிரை திரும்பி வராமலேயே இருந்திருக்கலாம். இப்போது பாருங்கள், இவருடைய மகன் கால் முடமாகிவிட்டது. என்று புலம்பினார்கள். அதற்கும் வியாபாரி, என் மகன், கால் உடைந்திருப்பது நிஜம்தான். பின்னால் நடப்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றான். சில நாட்களில் அண்டை நாட்டு அரசன் அந்நாட்டின் மீது படையெடுத்தான். அரசாங்கம் திடகாத்திரமான வாலிபர்கள் அனைவரும் தாய் நாட்டைக் காக்க படையில் சேரவேண்டும் என்று அறிவித்தது. கால் ஊனமான வியாபாரியின் மகனைத் தவிர அனைத்து இளைஞர்களும் பட்டாளத்துக்குப் போகவேண்டி வந்தது. இப்போதும் ஊரார் குழுமி, கால் முடமானாலும் உன் மகன் உன்னுடன் இருக்கிறான். எங்கள் பிள்ளைகள் யுத்தத்துக்குப் போய்விட்டார்களே என்று அரற்ற ஆரம்பித்தனர். வியாபாரி உங்கள் பிள்ளைகள் ராணுவத்துக்குப் போயிருக்கின்றனர்; என் பிள்ளை போகவில்லை. அவ்வளவுதான் நடந்திருக்கிறது. உங்கள் மகன்கள் சண்டை முடிந்து, வெற்றி வீரர்களாகவும் திரும்பி வரலாமல்லவா? என்று சமாதானப்படுத்தினார். நமக்கு ஒரு பிரச்னை வந்தால், கற்பனையைத் தட்டிவிடாமல், நடந்திருப்பதைச் சரியாகக் கவனித்து அதிலிருந்து மீளும் வழியை யோசிப்பதே புத்திசாலித் தனம் என்பதை அனைவரும் உணர்ந்தனர். |
|
|
|