|
முத்தமிழ் வளர்த்த மதுரை அன்று விழாக்கோலம் பூண்டிருந்தது. மங்கல இசை முழங்க, துந்துபிகள் ஒலிக்க, சோமசுந்தரப் பெருமானின் குருநாதர் வாழ்க! வாழ்க! என்ற வாழ்த்தொலி விண்ணதிர, பட்டத்து யானையின் ஊர்வலமாக வந்து கொண்டிருந்தார். பாண்டிய மன்னரின் அரசவையில் யாழிசைப் புலவராக விளங்கும் பாணபத்திரர். ஊர்வலம், சோமசுந்தரப் பெருமானின் திருக்கோயிலுக்கு முன் முடிவடைந்தது. பாணபத்திரரை எதிர்நோக்கிக் காத்திருந்த மன்னர் வரகுணபாண்டியர். இசைவாணரின் திருவடிகளில் வீழ்ந்து வணங்க முனைந்தார். அது கண்டு அஞ்சி, பதறிய பாணபத்திரர். அரசே! என்ன காரியம் செய்தீர்கள்? எம்மையெல்லாம் காக்கின்ற சிவபெருமானுக்கு அடுத்தபடியாக இருந்து, நாட்டு மக்களைப் புரக்கின்ற அரசர் பெருமானே! இச்செயல் தங்கள் தகுதிக்குத் தகாது என்று கூறினார். அரசர், இசைவாணரே! உம்பொருட்டே இறைவன் விறகு வெட்டியாக வந்தான். பாண்டி நாட்டின் பெருமையைக் குலைப்பேன் என்று ஆணவத்தோடு கூறிய ஏமநாதனுக்கு பாடம் கற்பித்தான். இறைவனின் அருள் பெற்ற தங்களை வணங்குவதில் தவறொன்றுமில்லை. என்றார்.
அதுகேட்டு திகைத்து நின்ற பாண பத்திரரை நோக்கி வரகுணபாண்டியர், தலைவா! இனி, தங்களது இனிய இசை சோமசுந்தரப் பெருமானுக்கே உரித்தாக வேண்டும். ஆதலால், தாங்கள் இதுமுதற்கொண்டு இறைவனரின் திருமுன்பு மட்டுமே இசைத்தொண்டினை ஆற்ற வேண்டும் என்றார். அதுகேட்டு பாணபத்திரரின் கண்கள் பனித்தன. கைகள் தலைமேல் குவிய, குரல் தழுதழுக்க, அரசே! நீண்ட நாட்களாக எனது நெஞ்சில் இருந்த பேரவா இதுதான். தங்கள் ஆணைப்படியே அடியேன் இனி சோமசுந்தரப் பெருமானின் திருமுன்னர் இசைத்தொண்டு புரிவேன் என்றார். பல்வேறு வரிசைப்பொருட்களுடன், அரச மரியாதைகளோடு பாணபத்திரரை வழியனுப்பிவிட்டு தேரேறி அரண்மனை சென்றார். வரகுணபாண்டியர். அதுமுதற்கொண்டு பாணபத்திரர் அனுதினமும் சோமசுந்தரக் கடவுளின் முன் முப்போதும் யாழிசைத்து இசைத்தொண்டு புரிவதை நியதியாகக் கொண்டு வாழ்ந்தார். அரசவை செல்லாததால் வருவாய்க்கு வழியில்லை கைப்பொருள் கரைந்தது. சிறிது சிறிதாக வறுமை புகுந்து முழுவதுமாக ஆக்ரமித்துக் கொண்டது உணவுக்கே தட்டுப்பாடு ஏற்படுகின்ற நிலை வந்துற்றது. ஆனாலும், பாணபத்திரர் நாளும் தமது இசைத்தொண்டினை தடையின்றி ஆற்றி வந்தார்.
ஒருநாள் இரவு பசிக் களைப்புடன் உறங்கிய பாணபத்திரரின் கனவில் சோமசுந்தரப்பெருமான் தோன்றி, யாம் ஒரு திருமுகம் தருகிறோம். அதனைக் கொண்டு நீ மலைநாடு சென்று அங்கு அரசாளும் எமது தொண்டன் சேரமான் பெருமாளிடம் சேர்ப்பித்தால் உனக்கு வேண்டும் பொருள். தந்து அனுப்பி வைப்பான் என்றருளி மறைந்தார். கண்விழித்து எழுந்த பாணபத்திரர், தம் அருகில் பெருமான் சொன்னபடி ஒரு ஓலை இருக்கக் கண்டார். அதில் மதிமலி புரிசை.... எனத் தொடங்கும் திருமுகப்பாசுரத்தைக் கண்ணுற்றார். (11 ஆம் திருமுறையில் முதற்பாசுரம்) பெருமானின் கருணையை எண்ணி அவர் கண்கள் நீரைச் சொரிந்தன. திருமுகத்தை எடுத்துக் கொண்டு மலைநாடு நோக்கிப் பயணம் செய்தார். தலைநகராகிய திருவஞ்சைக்களத்தை அடைந்தார். பசியாலும், களைப்பாலும் இளைத்து நகரின் வீதியிலிருந்த தண்ணீர்ப்பந்தல் ஒன்றைக் கண்டு அங்கு இளைப்பாறினார். அன்றைய முதல்நாள் இரவு இறைவன் சேரமான் பெருமாள் நாயனாரின் கனவில் தோன்றி, யாம் அளித்த திருமுகத்தைக் கைக்கொண்டு பாணபத்திரன் உன்னை நாடி வருகிறான். அவனுக்குப் பெருநிதியளித்து விரைந்து அனுப்புக என்றருளி மறைந்தார். திடுக்கிட்டு விழித்தெழுந்த மன்னருக்கு அதற்குப் பின் உறக்கம் வரவில்லை. பொழுது புலர்ந்ததும் காவலரை அழைத்து, பாணபத்திரரைத் தேடி, அவரிருக்குமிடத்தை அறிந்து வருக! என்று ஆணையிட்டார். ஏவலர் பல இடங்களிலும் தேடி, இறுதியில் பாணபத்திரர் தங்கியிருந்த தண்ணீர்ப் பந்தலில் அவரைக் கண்டறிந்தார்கள். உடனே சென்று அரசருக்குத் தெரிவித்தார்கள். அரசர் நால்வகைப் படைகள் சூழ வந்து பாணபத்திரரைக் கண்டு, உச்சிமேல் கைகுவித்து வணங்கினார். பிறகு இறைவனார் அளித்த திருமுகத்தை அளிக்கும் படி பணிவுடன் கேட்டார். பாணர் அளிக்க, அதனை வாங்கித் தம் தலைமேல் தாங்கினார். கண்களில் நீர் பெருக, மகிழ்ச்சி பொங்க, உடல் சிலிர்க்க, ஆனந்தக் கூத்தாடினார். அவ்வோலையில் கண்டிருந்த செய்தியினைக் கண்ணுற்றார். அதில்; ஒளி விளங்கும் பொன்மாடங்கள் நிறைந்ததும் அன்னப்பறவைகள் பழகும் வயல்கள் சூழ்ந்ததுமாகிய மதுரையம்பதியிலுள்ள ஆலவாய்க்கோயிலில் உறையும் சோமசுந்தரன் கூறுவது. நல்ல மழைதரும் மேகத்தைப்போல புலவர்களுக்கு வரையாது அளிக்கும் சேரவேந்தன் அறிவது யாதெனின்.
இத்திருமுகம் கொணரும் இனிய இசைவளமுடைய யாழில்வல்ல பாணபத்திரன் உன்னைப்போல் எம்மிடத்து அளவிலா அன்புடையவன் அவன் உன்னை நாடி வருகிறான். அவனுக்குப் பெரும் பொருள் கொடுத்து அனுப்புக என்றிருந்தது. அதைக் கண்டு சேரமான் பெருமாள் எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்தார். பட்டத்து யானை மீது பாணபத்திரரை அமரச் செய்து, தாம் அவர் பின்னால் அமர்ந்து கவரி வீசினார். பல்வகை வாத்தியங்கள் முழங்க, நகரை வலம்வரச் செய்தார். அரண்மனை அடைந்து, நறுமண நீரால் திருமஞ்சனம் செய்வித்தார். மணிமண்டபத்தில் எழுந்தருளச் செய்து அறுசுவை உணவளித்தார். பிறகு பாணபத்திரரை நோக்கி, எம் தலைவரே! இங்குள்ள எல்லாத் திரவியங்களையும் தாங்கள் எடுத்துச் செல்லலாம் என்றார். பாணபத்திரர், தங்கள் பண்டாரத்தில் உள்ள செல்வத்தில் எளியேனுக்குத் தேவையான பொருள் அளித்தாலே போதும் என்றார். சேரமான் எல்லாச் செல்வமும் பெருமானுக்குரியவை. எனக்குரியது என்று ஏதுமில்லை. என்று கூறி, பாணபத்திரருக்கு பொன் அணிகளையும், பெருநிதியையும், பொற்சிவிகையும், யானைகளும், குதிரைகளும், பட்டாடைகளும் அளித்தார். அவற்றைப் பெற்றுக்கொண்டு, சேரமான் பெருமாளிடம் விடை பெற்று புறப்பட்டார். பாணபத்திரர் மரியாதை நிமித்தமாக சேரமான் பெருமாள் பாணபத்திரரின் பின்னால் ஏழடி நடந்து சென்றுவழி அனுப்பி வைத்து மீண்டார். பல்லக்கில் திரும்பிய பாணபத்திரரின் விழிகளில் ஆனந்தம் கண்ணீராய் வழிந்தது. எளியவனான எனக்காக திருமுகம் எழுத முற்பட்ட ஈசனின் கருணைனை வியப்பதா? அதற்குச் சற்றும் குறையாத பெரும் அடக்கத்தையும் பணிவையும் வெளிப்படுத்திய சேரமான் பெருமானை வியப்பதா? கேள்விகள் தோண்டத் தொடங்க, கண்களிலிருந்து பெருகிய ஊற்றும் சுரந்து கொண்டே இருந்தது. |
|
|
|