|
பகவத் கீதையின் ஆறாவது அத்தியாயம் தியான யோகம் எனப்படும். தியானம் என்பது ஒருவிதமான ஸாதனை, உடலால் வீழ்ந்து வணங்குவதுபோல, வாக்கால் பொருள் சேர்ந்த புகழ் மொழிகளைப் பாடுவதுபோல, தியானம் என்பது மனதினால் செய்யப்படும் ஒரு ஸாதனை, தியானம் என்றால் மனதால் ஆழ்ந்து எண்ணுவது என்று பொருள். தியானம் என்பது இன்றைய காலகட்டத்தில் மிக அதிகமாகப் பயன்படுத்தப்படும் ஒரு சொல். அதே சமயம், மிகத் தவறாகப் புரிந்து கொள்ளப்படும் ஒரு சொல்லும் கூட. தியானம் என்பது வெறும் அரைமணி நேர ஸாதனை அல்ல. இருபத்து மூன்றரை மணிநேரம் நெறிப்படி வாழ்ந்தால்தான், அரை மணிநேரம் தியானம் பழக முடியும். ஆழ்ந்த உறக்கத்தின் மூலம் உடல் புத்துணர்ச்சியை அடைவதைப்போல, ஆழ்ந்த தியானத்தின் வாயிலாக மனம் புத்துணர்ச்சியை அடைகிறது. தியானத்தினால் எவற்றையெல்லாம் அடையலாம் என்பதை அறியுமுன், தியானத்தினால் எவற்றையெல்லாம் அடைய முடியாது. என்பதை முதலில் அறிந்து கொள்ள வேண்டும். தியானத்தின் மூலம் ஞானத்தை அடைய முடியாது. ஞானத்தைப் பெறுவதற்கு தியானம் பேருதவி செய்யும் என்பதில் ஐயமில்லை.
தியானத்தின் வாயிலாகச் சில புதுவித அனுபவங்களை ஒருவர் உணரலாம். அவற்றால், எந்தப் பயனும் இல்லை. புது அனுபவங்களைப் பெறுவது தியானத்தின் நோக்கமல்ல. தியானத்தின் பயன் ஸித்திகளைப் பெறுவதுமல்ல. பல வருடங்கள் தொடர்ந்து தியானம் செய்வதால், ஒருவர் சில ஸித்திகளைப் பெறலாம். ஆனால், அந்த ஸித்திகள் அனைத்தும் மோக்ஷத்துக்கு தடைகளாகும். பிறர் மனதைக் கண்டறியும் நோக்கத்துடன், வருங்காலத்தைப் பற்றி அறிந்து கொள்ளும் பேராசையுடன் தியானம் பழகுதல் வீண்வேலை. இருபுறமும் கூரான கத்தியை போன்றது தியானம். அதனை மிகக் கவனமாகக் கையாள வேண்டும். எதற்காக தியானம் பழக வேண்டும்.? ஞானத்தைப் பெறுவதற்குரிய தகுதிகளை அடைவதற்காக, தியானம் பழக வேண்டும். ஞானத்தைப் பெறுவதற்கு மனதைத் தயார் செய்ய உதவும் தியானத்துக்கு உபாஸனை என்று பெயர். ஞானம் பெற்ற பிறகு, அந்த ஞானத்தை ஆழ்மனதில் நிலை நிறுத்தும் பயிற்சியாகிய தியானத்துக்கு நிதித்யாஸனம் என்று பெயர். நம் மனதில் பலவிதமான பலவீனங்கள் குடி கொண்டிருக்கின்றன. ஞானத்தைப் பெறுவதற்கு முன். அந்த பலவீனங்களை வெற்றிகொள்ள வேண்டும். அதற்கு சாஸ்திரங்களில் நான்கு வித தியானங்கள் பரிந்துரைக்கப்படுகின்றன.
முதலாவது, மனதை அமைதிப்படுத்தும் தியானம் (கீஞுடூச்துச்tடிணிண Mஞுஞீடிtச்tடிணிண) இடையறாது செயலாற்றிக் கொண்டிருக்கும் நம் உடலுக்கும் மனதுக்கும் அமைதியாக ஓரிடத்தில் சிறிது நேரம் அமரும் பழக்கம் அறவே இல்லை. எனவே தொடர்ந்து பதினைந்து நிமிடங்கள் ஓரிடத்தில், உடல் உறுப்புக்களை ஒவ்வொன்றாக தளர்த்தி, உடலை அசைக்காமல் வைத்திருக்கும் பயிற்சி மிக அவசியம். எந்தத் திட்டமிடலும் இன்றி, அமைதியாக இருக்கும்படி புத்திக்குக் கட்டளையிட வேண்டும். இந்தப் பயிற்சியைச் செய்யாததால்தான் பலருக்குத் தியானம் என்பது தோல்வியில் முடிகிறது. குறைந்தது மூன்று மாத காலமாவது உடலையும் மனதையும் அமைதிப்படுத்தும் தியானத்தைச் செய்ய வேண்டும். அடுத்து, மனதை ஒருமுகப்படுத்தும் தியானம் (இணிணஞிஞுணtணூச்tடிணிண Mஞுஞீடிtச்tடிணிண) மனதை ஏதேனும் ஓர் எண்ணத்தில் குவித்தல். நொடிக்கு நொடி நம் மனதில் உள்ள எண்ணங்கள் மாறிக்கொண்டே இருக்கின்றன. மனதை ஒரு பொருளில், ஒருசெயலில் குவிக்கும் முயற்சியே இந்தத் தியானம். புறத்தில் செய்கின்ற பூஜையை, எளிமையாக அகத்தில் செய்வதாக எண்ணுவது மானஸ பூஜை எனப்படும். வாயால் உரக்கக் கூறாமல், உதடுகளைக் கூட அசைக்காமல், நமக்கு மனப்பாடமாகத் தெரிந்த சுலோகங்களை, பாடல்களை மனதுக்குள் கூறுவது மானஸ பாராயணம் எனப்படும். மனதுக்குப் பற்றுக்கோடாக, ஓம் நம; சிவாய போன்ற இறை நாமத்தைக் கொடுக்க வேண்டும். மனம் மீண்டும் மீண்டும் இதிலிருந்து நழுவிச் செல்லும் எத்தனை முறை நழுவினாலும், மீண்டும் அதனை இழுத்து அந்த நாமத்தில் நிறுத்த முயல வேண்டும். இது மானஸ ஜபமாகும். |
|
|
|