|
கால தாமதம் என்பது இப்போதுசாதாரணமாகி விட்டது.தாமதமா வந்ததைப் போயி பெரிசா பேசுறீங்களே என்று கூட சிலர் கோபிப்பதுண்டு. கால தாமதத்தின் விபரீதத்தைச் சொல்லும் கதை இது. தேவலோகத்தில் அன்று விசேஷம். தேவேந்திரன்சிம்மாசனத்தில் வந்து அமர்ந்து விட்டான். ஆனாலும், தேவர்கள் அனைவரும்காமதேனுவின் வருகைக்காக காத்திருந்தனர். நீண்டநேரம் கழித்தே, காமதேனு இந்திர சபைக்குள் நுழைந்தது. அதைக் கண்ட இந்திரன் வெகுண்டு,காமதேனுவே! காலம் கடந்து வந்த நீ பூலோகத்தில் காட்டுப்பசுவாக மாறக் கடவது என்று சபித்தான்.காமதேனுஇந்திராணியிடம் சென்று அழுதுமுறையிட்டது.இந்திராணி காமதேனுவிடம், கவலைப்படாதே! பூலோகத்தில் வகுளாரண்ய க்ஷேத்திரம் சென்று சிவபெருமானை வழிபடு.சாப விமோசனம் உண்டாகும் என்று வழிகாட்டினாள். கடவுள் ஒரு கதவைமூடினால், மற்றொரு கதவைத் திறப்பார் என்பது உண்மை தானே!காமதேனுவும் பூவுலகில் கபில முனிவரின் ஆஸ்ரமத்தை அடைந்தது. முனிவரின் ஆணைப்படி, தினமும் காது மடலில் கங்கை நீரை ஏந்திச் சென்று சிவனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டது. சாப விமோசனம் கிடைக்கும் காலம் நெருங்கியது. ஒருநாள்.....பசுவழிபாட்டிற்கு செல்லும்வழியில்,சிவன் ஒரு வேங்கைப் புலியாக மாறி வழி மறித்தார். பயம் சிறிதும் இன்றி பசு,புலியே! என் அன்றாடக் கடமையான சிவவழிபாட்டுக்குச் சென்று கொண்டிருக்கிறேன். திரும்பி வரும்போது, என்னை நீ உணவாக்கிக் கொள்! என்று சொன்னது. புலியும் சம்மதித்தது. வாக்கு தவறாமல் பசு, சிறிது நேரத்தில் திரும்பி வர புலி அங்கு இல்லை.கடமையுணர்வு, சத்திய நெறி தவறாத பசுவின் முன் சிவன் காட்சியளித்தார். பசு தன் மீண்டும் சுயவடிவம் பெற்று காமதேனுவாக மாறியது. வேங்கை வடிவில் சிவன் தோன்றிய இடம் வேங்கை வாசல் எனப்படுகிறது. புதுக்கோட்டை அருகிலுள்ள இவ்வூர், பசு (கோ) தன் காதில் (கர்ணம்) கங்கை நீரை ஏந்தி வந்து அபிஷேகம் செய்ததால் கோகர்ணம் என பெயர் பெற்றது. இங்கு வழிபட்டால் கடமை உணர்வு, வாக்குதவறாமை ஆகிய நற்குணம் உண்டாகும். மூன்றெழுத்து மந்திரமான கடமையை முழு மூச்சாகக் கொள்வதன் அவசியம் புரிகிறதா!
|
|
|
|