|
குரு என்றதும் நம் நினைவிற்கு வருபவர் தட்சிணாமூர்த்தியே! தென்முகக்கடவுளான இவரை சற்று நெருங்கி தரிசிப்போம்.சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் என்ற நால்வரும் சிவனைத் தரிசித்தனர். அப்போது, கல்லால மரத்தடியில் தென்திசை நோக்கி வீற்றிருந்தார். இவரை தட்சிணாமூர்த்தி என்றனர். தட்சிணம் என்றால் தெற்கு. கல்லால மரத்திற்கு இச்சி மரம் என்றும் பெயருண்டு. இச்சை என்பதில் இருந்தே இச்சி என்ற சொல் பிறந்தது. இச்சை என்றால் விருப்பம். நாம் விரும்பிப் பெற வேண்டியது ஞானம். அதை அருளக்கூடிய ஞான தெய்வம் இருக்கும் மரம் என்பதால், இச்சி மரம் என்றானது. முனிவர்கள் சிவனிடம், பரம்பொருளே! @வதம் அனைத்தையும் அறிந்தும், மனதில் தெளிவு பிறக்கவில்லை. நீ@ர அருள் புரிய வேண்டும், என வேண்டினர்.அப்போது சின்முத்திரை காட்டிய தட்சிணாமூர்த்தி, மைந்தர்களே! ஞானத்தை வார்த்தைகளால் விளக்க முடியாது. மவுனமாகத் தியானம் செய்வ@த ஞானம் பெறும் வழி, என்றார்.
சின்முத்திரை என்பதற்கான விளக்கத்தைத் தெரிந்து கொள்ளுங்கள். கட்டைவிரலும், சுட்டுவிரலும் இணைந்துஇருக்கும். நடுவிரல், மோதிர விரல், சுண்டுவிரல் மூன்றும் தனித்து நிற்கும். இதில் கட்டைவிரல் இறைவனையும், சுட்டுவிரல் நம்மையும் அதாவது உயிர்களையும் குறிக்கும். மற்ற மூன்று விரல்கள் ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்றையும் குறிக்கும். நான் என்ற எண்ணத்துடன் இருப்பது ஆணவம். உயிர்களைப் பற்றியிருக்கும் நல்வினை (புண்ணியம்), தீவினை(பாவம்) இரண்டும் கன்மம். நிலையில்லாத உலகப் பொருட்கள் அனைத்தும் மாயை. இந்த மூன்றிலிருந்தும் விலகி உயிர் இறைவனோடு சேர வேண்டும் என்பதை உணர்ந்த முனிவர்கள் தெளிவு பெற்றனர். இதில் கன்மம் என்பதில் புண்ணியம் என்ற நல்வினை பற்றிய குழப்பம் எல்லாருக்கும் வரும். கன்மத்தை விட வேண்டும் என்றால் நல்ல செயல்களையும் விட்டு விட வேண்டுமா என்று எண்ணத் தோன்றும். அப்படியல்ல... பாவம் செய்தால் மட்டும் பிறவி ஏற்படும் என்பதில்லை. புண்ணியம் செய்தாலும் பிறவி ஏற்படும். எனவே, எந்த நன்மை செய்தாலும் அதன் பலன் இறைவனை சேரட்டும் என எண்ண வேண்டும். அப்போது, இறைவன் மனம் குளிர்ந்து நம் பிறவிப்பிணியை அறுத்து விடுவான். எல்லாமும் கடவுளுக்கே அர்ப்பணம் என்ற தெளிவே பிறப்பை வேரறுக்கும். தட்சிணா மூர்த்தியிடம் அதையே வேண்டுவோம். |
|
|
|