|
இங்கே ஐயப்ப சுவாமி வழக்கமாக காட்டும் சின்முத்திரையை விட்டுவிட்டு, மூக்கின் மேல் விரலை வைத்து ஏதோ சிந்தித்துக் கொண்டிருக்கிறார். இப்படி ஒரு சிலை தஞ்சாவூர் அருகிலுள்ள ஒரு கோயிலில் 16ம் நுõற்றாண்டு காலத்தில் இருந்தது. இது நடந்தது, ராமராயர், சின்ன பொம்ம நாயக்கர், வீரசிம்ஹ பூபாலம் என்ற மன்னர்களின் காலம். இவர்களில் ஒரு ராஜா கோயிலுக்கு போயிருக்கிறார். அவரது கண்ணில் இந்த சிலை பட்டிருக்கிறது. சாஸ்தா சின்முத்திரையல்லவா காட்டுவார். இவர் இங்கே மூக்கில் விரலை வைத்துக் கொண்டிருக்கிறாரே, இது என்ன அதிசயம் ? என கோயில் நிர்வாகஸ்தர்களிடம் கேட்டிருக்கிறார். மகாராஜா ! இதைச் செய்த சிற்பிக்கு இதே கோலத்தில் ஐயப்பசாஸ்தா காட்சி தந்திருக்கிறார். அதன் காரணம் தெரியாமல் இதை அப்படியே வடித்து விட்டார்.பிற்காலத்தில் சகல அறிவும் பொருந்திய ஒரு பெரியவர் இங்கே வருவார். அவர், வந்து இதற்குரிய விடையைச் சொன்னவுடன், சிலை மூக்கிலிருந்து விரலை எடுத்துவிடும், என்று சொல்லி விட்டு போய்விட்டார். அப்புறம் பல பெரியவர்கள் வந்தார்கள். நாங்களும் அவர்களிடம் விளக்கம் கேட்போம். அவர்களும் ஏதோ சொல்வார்கள். ஆனால், ஐயப்பன் இன்னும் மூக்கில் இருந்து கையை எடுத்தபாடில்லை, என்றார்கள்.ராஜாவுடன் அப்பைய தீட்சிதர், தாதாசாரியார் என்ற இரண்டு அறிவுஜீவிகள் சென்றிருந்தனர். இவர்களில் பின்னவர், வைணவப் பெரியவர். முன்னவரோ சிவ பக்தர். தாதாசாரியாரிடம் மன்னர் இதற்குரிய விளக்கம் கேட்டார். ஒரு ஸ்லோகத்தைச் சொன்னார். அதன் பொருள் இதுதான்.
நான் விஷ்ணுவுக்கு மகன். அப்படியானால், பிரம்மனுக்கு சமமானவன். (பிரம்மாவும் விஷ்ணுவின் நாபியில் உள்ள தாமரையில் பிறந்தவரல்லவா) இதனால் நான் தனித்தன்மை பெற்றவனாய் உள்ளேன். தேவர்களால் வணங்கப்படுகிறேன். ஆனால், நான் சிவனுக்கும் பிள்ளை. அவர் பூதக்கூட்டங்களின் தலைவன். விஷ்ணுவுக்கும் பிள்ளை, சிவனுக்கும் பிள்ளை, அதெப்படி ? என்று சிந்தனையில் மூழ்கியுள்ளதாகச் சொன்னார். இவர் சொன்ன விளக்கம் சரியாக இருந்தால், ஐயப்பன் மூக்கிலிருந்து விரலை எடுத்திருக்க வேண்டுமல்லவா ! அவர் எடுக்கவில்லை.உடனே ராஜா அப்பைய தீட்சிதரிடம் திரும்பினார்.அவர் ஒரு ஸ்லோகத்தைச் சொன்னார். இதுவும் சாஸ்தா சொல்வது போலவே அமைந்தது. அதன் பொருள் இதுதான்.கவுரியான பார்வதிதேவியை நான் அம்மா என்கிறேன். ஏனெனில் என் தந்தை சிவன். என்னைப் பெற்றெடுத்த அவருக்கு எத்தனை பத்தினிகள் இருந்தாலும், எல்லோரும் எனக்கு தாய் ஸ்தானம் தான். ஆனால் மகாவிஷ்ணுவை அம்மாவாகக் கொண்ட எனக்கு, அவரது துணைவியான லட்சுமி என்ன முறை வேண்டும் ? என்று சிந்தித்தும் கொண்டிருக்கிறார் என்றார்.இதைச் சொன்னாரோ இல்லையோ, சிலை மூக்கிலிருந்து கையை எடுத்து வழக்கமான சின்முத்திரையுடன் அமர்ந்து விட்டது. அப்பாவின் மனைவி அம்மா, சித்தப்பாவின் மனைவி சித்தி, மாமாவின் மனைவி அத்தை, அண்ணாவின் மனைவி அண்ணி.... ஆனால் அம்மாவின் மனைவி யார் ?இன்றுவரை யாராவது இப்படி சிந்தித்திருக்கிறார்களா ? இந்தக் கேள்விக்கு விடை தான் கண்டு பிடித்திருக்கிறார்களா ?இறைவனை யாராலும் அறிந்து கொள்ள முடியாது என்பது இதனால் தானோ ? |
|
|
|