|
துர்வாசர் கடும் கோபக்காரர், சின்ன தவறென்றாலும் கூட இந்தா பிடி சாபத்தை ! என்று கொடுத்துவிட்டார். இத்தகைய கோபக்கார முனிவருக்கு, பிருகத்சேனன் என்ற சீடன் இருந்தான். குருவின் குணமறிந்து, அதற்கேற்ப இதம்பதமாக நடந்து கொள்பவன் இவன். ஒருசமயம் துர்வாசர் யாகம் நடத்த விரும்பினார். அதற்கான ஏற்பாடுகளைச் செய்யும்படி பிருகத்சேனனிடம் கூறியிருந்தார். அவன், யாகத்தீ வளர்க்க தேவையான சமித்துக்கள் (மரக்குச்சி) பொறுக்கச் சென்றான். மழை காலமாக இருந்ததால், அவை நமத்துப் போயிருந்தன. யாக குண்டத்தில் அக்னி வளர்ப்பதற்காக அந்த ஈரக்குச்சிகளை போட்டான். முதல்நாள் மழையில் நனைந்ததில், அவனுக்கு கடுமையான காய்ச்சல் இருந்தது. ஆனாலும், அதை தாங்கிக்கொண்டு, குண்டத்தில் போட்ட நமத்த குச்சிகளை எரியச் செய்ய முயற்சி செய்து கொண்டிருந்தான். குச்சியில் சரியாக தீப்பிடிக்கவில்லை. எனவே ஒரு ஊதுகுழலை எடுத்து ஊதினான். அப்போது, ஒரு நெருப்பு பொறி பறந்து, யாககுண்டத்தில் முன்னால் அமர்ந்திருந்த துர்வாசர் மீது பட்டு விட்டது அவருக்கு ஆத்திரம்.... முட்டாளே ! நமத்துப் போன குச்சிகளை ஏன் குண்டத்தில் போட்டாய் ! காய்ந்த குச்சிகளை ஆஸ்ரமத்தில் எந்த நேரமும் இருப்பு வைத்திருக்க வேண்டும் என்ற சிறு விஷயம் கூட உனக்குத் தெரியாதா ? இப்படி தவறு செய்ததால், பல கோடி ஆண்டுகளுக்கு நீ நரக அக்னியில் விழுந்து தவிப்பாய், என சாபமிட்டார். அவன் நடுங்கி விட்டான்.
சுவாமி ! உடல்நிலை சரியில்லாத நிலையில், விறகு பொறுக்க கால தாமதமாகி விட்டது. மழை வேறு. அதனால் தான் இப்படியாகி விட்டது. பொறுத்தருள வேண்டும், என்றான். துர்வாசரோ முடியவே முடியாது என சொல்லிவிட்டார். ஒரு சிறிய தவறுக்கு இவ்வளவு பெரிய தண்டனையா என வருந்தினான் பிரகத்சேனன். அவனது மனைவி ஹேமலதா அந்த ஆஸ்ரமத்திலேயே தங்கி பணிகள் செய்து கொண்டிருந்தாள். அவளிடம் போய், தன் நிலையைச் சொல்லி மிகவும் வருத்தப்பட்டான். அவள் ஆவேசமாக பூஜையறைக்குச் சென்றாள். அங்கே தீபம் எரிந்து கொண்டிருந்தது. அக்னி பகவானே ! என் கணவர் ஒன்றும் மிகப்பெரிய தவறு செய்து விடவில்லை. அதற்காக, முனிவர் உன் மூலமாக அவரை சுட்டெரிக்க சாபமிட்டிருக்கிறார். நான் பத்தினி என்பதை நீ ஒப்புக்கொள்வாயானால் இப்போதே குளிர்ந்துவிடு. இனி, நீ எந்த இடத்திலும் ஒளிரக்கூடாது. உன் உஷ்ணத்தை மறைத்துக் கொள், என உரக்கச் சொன்னாள். அதைக்கேட்ட அக்னி உடனே அணைந்து விட்டான். உலகில் யார் நெருப்பு பற்ற வைத்தாலும் பற்றவில்லை. சூரியனின் உக்கிரமும் காணாமல் போய்விட்டது. சிவனின் நெற்றிக் கண்ணும் கூட குளுமையானது. துர்வாசர் வளர்த்த யாககுண்டத்தில் இருந்த தீயும் அணைந்து விட்டது. அனைத்தும் அறிந்த மும்மூர்த்திகள் ஹேமலதா முன்பு தோன்றினர். அவளைச் சமாதானம் செய்து, மீண்டும் அக்னிதேவன் சுடர்விட யாசித்தனர். மும்மூர்த்திகளும் தங்கள் ஆஸ்ரமத்திற்கு வந்து காட்சி தரக் காரணமான இச்சம்பவத்தால் துர்வாசரும் மனம் குளிர்ந்தார். ஹேமலதாவின் கற்பின் திறனுக்கு கட்டுப்பட்டு, தனது சாபத்தை விலக்கிக்கொண்டார். யாராவது தவறு செய்தால், அதைச் சுட்டிக்காட்டி திருத்துங்கள். எடுத்ததற்கெல்லாம் தண்டனை கொடுக்காதீர்கள். குறிப்பாக, குழந்தைகள் விஷயத்தில் இதைக் கடைபிடியுங்கள். |
|
|
|