|
பிருகதச்வன் என்ற மன்னர் தேவலோக தலைமைப் பதவி மீது கொண்ட ஆசையால், நுõறு அஸ்வமேத யாகம் செய்ய விரும்பினார். இதுபற்றி தன் குருவிடம் ஆலோசனை கேட்டார். குரு அவரிடம், மன்னா! பதவிகள் நிலையற்றவை. தெய்வத் திருவடியை அடைவதே நிலையான பதவி என்று அறிவுறுத்தினார். இருப்பினும், மன்னருக்கு ஆசை விடவில்லை. 92 யாகம் முடிந்தது. இந்நிலையில் குரு இறந்து போனார். அந்தணர் குலத்தில் வாமதேவர் என்ற பெயரில் அவதரித்தார். ஒன்பது வயதில் அவருக்கு, உபநயனம் என்னும் பூணுõல் கல்யாணம் நடந்தது. அப்போது மன்னர் பிருகதச்வன் 100வது யாகத்தை ஆரம்பித்திருந்தார். அங்கு சென்ற வாமதேவரிடம், சுவாமி! உங்களுக்கு வேண்டியதைக் கேளுங்கள். இப்போதே தருகிறேன் என்றார் மன்னர். மன்னா! உனக்கு உரிமையாக உள்ள அனைத்துமே எனக்குரியதாக ஆகட்டும் என்ற வாமதேவரிடம், இந்த நிமிடம் முதல் என்னுடையதெல்லாம் உங்களுக்கே சொந்தம் என்று சொல்லி சிம்மாசனத்தில் வாமதேவரை அமர வைத்தார். வாமதேவர், மன்னா! கொடுக்கும் தானத்தை தட்சிணையோடு கொடு என்றார்.
இதோ! என்ற மன்னர் கழுத்தில் இருந்த முத்து மாலையை கழற்ற முயன்றார். தடுத்த வாமதேவர், உனக்குரிய அனைத்தும் எனக்கு தந்து விட்ட பிறகு, மாலையும் என்னுடையதே. அதை எப்படி தட்சிணையாக தர முடியும்? என்றார். மன்னர் செய்வதறியாமல் கீழே சரிந்து உறக்கத்தில் ஆழ்ந்தார். அப்போது கனவு வந்தது. அதில் எமதர்மன் முன் மன்னர் நின்றான். புண்ணியம் அதிகமாகவும், பாவம் கொஞ்சமாகவும் நீ செய்திருக்கிறாய். முதலில் எதற்குரிய பலனை அனுபவிக்க விரும்புகிறாய்? என்று கேட்டான். பாவத்தின் பலனையே முதலில் தாருங்கள் என்றார் மன்னர். அதன்படி, மன்னர் கொடிய பாலைவனத்தில் தள்ளப்பட்டார். தகிக்க முடியாத வெப்பம் நிலவியது. அப்போது முன்னாள் குரு எமதர்மன் முன் வந்து, எமதர்மா! இந்த மன்னனின் உடமை எல்லாம் எனக்கு உரிமையான பிறகு அவனுக்கு ஏது பாவமும், புண்ணியமும்...! அவனுக்கு நரகத்தை தராதே... என்று கூறினார். உடனே பாலைவனம் நந்தவனமானது. குளிர்ந்த காற்று வீசியது. இத்துடன் கனவு கலைய மன்னர் எழுந்தார். வாமதேவராக வந்துள்ளது, தன் முன்னாள் குரு என்ற உண்மையைத் தெரிந்து கொண்டார். தன் செல்வத்தை மட்டுமின்றி, பாவ, புண்ணியத்தையும் ஏற்றுக் கொள்வதாக அறிவித்த குருநாதரின் பெருந்தன்மை கண்டு மகிழ்ந்தார்.
|
|
|
|