|
ஒரு மாமரத்தின் அடியில் ஒரு பழம் கிடந்தது. அதைச் சுவைத்துப் பார்த்த ஒரு நரி, ஆஹா! மாம்பழம் இவ்வளவு தித்திப்பாக இருக்கிறதே! என்று மகிழ்ந்து, மரத்தை அண்ணாந்து பார்த்தது. நிறைய பழங்கள் பழுத்துத் தொங்கின. நரிக்கு மேலும் சில மாம்பழங்களைச் சுவைத்துப் பார்க்க ஆசை எழுந்தது. மரத்தில் ஒரு காகம் அமர்ந்துஇருந்தது. நரிக்கு அதன் புத்தி வேலை செய்தது. காகத்தை புகழ்ந்து பேசினால் காரியம் சாதித்துக் கொள்ளலாம் என்று கணக்குப் போட்டது. காகத்தை பார்த்து, பொன்னிற காகமே! நல்ல மயிலின் அழகும், குயிலின் குரலும் கொண்டு விளங்குகிறாயே! என்று புகழ்ந்து தள்ளியது. இதைக்கேட்ட காகம், உத்தமமான குலத்தில் பிறந்ததால் உனக்கு என் அருமை தெரிந்திருக்கிறது. பாவம்! நடந்து வந்த களைப்பும், அயர்வும் உன் முகத்தில் தெரிகிறது. வயிறு நிறைய மாம்பழங்களைச் சாப்பிடு, என்று கூறி மாம்பழங்களை நரிக்கு கிடைக்கும்படி கொத்திக் கீழே போட்டது. உடனே நரி, என்ன நாம் சொல்லிவிட்டோம். மயில், குயில் என்று புகழ்ந்து பேசினோம். அவ்வளவுதானே! அதற்கு நம்மை உத்தம குலம் என புகழ்ந்ததுடன், பசிக்கு மாம்பழமும் தந்து காகம் அமர்க்களப்படுத்தி விட்டதே! என்று எண்ணியவாறே மாம்பழங்களைச் சுவைத்து மகிழ்ந்தது. இதைத் தான் காக்கா புடிப்பது என சொல்கிறார்கள். |
|
|
|