|
குலோத்துங்க பாண்டியன் காலத்தில், திருப்புத்துõரில் இருந்து அந்தணர் ஒருவர் மனைவி, குழந்தையுடன் மதுரை வந்து கொண்டிருந்தார். வழியில் மனைவிக்கு தாகம் எடுத்ததால், ஒரு ஆலமரத்தடியில் அமர வைத்து விட்டு, தண்ணீர் எடுக்கச் சென்றார். அப்போது மரக்கிளையில் சிக்கியிருந்த ஒரு அம்பு, காற்றில் அசைந்து, கீழே விழுந்ததில் பெண்ணின் வயிற்றில் குத்தி உயிரைக் குடித்தது. அந்தணர் வந்து பார்த்த சமயத்தில், அந்தப் பக்கமாக வேடன் ஒருவன் வேட்டையாடிக் கொண்டிருந்ததைக் கண்டார். அவன் விட்ட அம்பு தான், தன் மனைவி மீது பட்டு இறந்து கிடப்பதாக நினைத்த அந்தணர், குலோத்துங்க பாண்டியனிடம் புகார் அளித்தார். விசாரணை ஆரம்பமானது. அந்தணரின் அனுமானத்தை உண்மையெனக் கருதிய மன்னனும் வேடனைச் சிறையிலிட உத்தரவிட்டான். நான் கொலை செய்யவில்லை. இது சத்தியம் என்று வேடன் அழுதான். செய்வதறியாத மன்னன் கோவிலுக்குச் சென்று சொக்கநாதரிடம் முறையிட்டான்.
அப்போது அசரீரியாக, குலோத்துங்கா! வணிகர் வீதியில் ஒரு திருமணம் நடக்க இருக்கிறது. அந்தணருடன் அங்கு வந்தால் தெளிவு கிடைக்கும், என அசரீரி கேட்டது. அதன்படியே, அரசன் மாறுவேடம் பூண்டு சென்றான். அங்கே எமதுõதர் இருவர் பேசுவதைக் கேட்டான். இந்த மாப்பிள்ளையின் உயிரைக் கொண்டு வர, எமன் உத்தரவு போட்டிருக்கிறாரே! எப்படி உயிரைக் கவர்வது? என்று ஒருவன் கேட்க, அடுத்த துõதன் பதில் சொன்னான். ஆலமரத்தில் சிக்கியிருந்த அம்பைக் காற்றால் அசைத்துக் கீழே தள்ளி, பெண்ணைக் கொன்றோமே! அதைப் போலச் செய்யலாம். இங்கிருக்கும் கன்று ஈன்ற பசுவை மேள, தாளச் சத்தத்தில் அறுத்துக் கொண்டு ஓடச் செய்வோம். அதுவே அவனை முட்டிக் கொன்று விடும், என்றான். அவர்கள் சொன்னபடியே கயிறை அறுத்துக் கொண்ட பசுவும் ஓடி, மணமகனை முட்டிக் கொன்றது. மன்னனும், அந்தணரும் இதைக் கண்டு உண்மையை உணர்ந்தனர். பாண்டியன் சிறைக்கு ஓடோடி வந்து, வேடனே! உன்னை அறியாமல் தண்டித்தேன். என் பிழையைப் பொறுத்துக் கொள், என்றான். வேடன் விடுதலை அடைந்தான். திருவிளையாடல் புராணத்திலுள்ள இந்த வரலாற்றின் மூலம், தவறு செய்யாதவர்களை ஆட்சியாளர்கள் தண்டித்தாலும், ஆண்டவன் கைவிடுவதில்லை என்பது தெளிவாகிறது. |
|
|
|