|
காற்றைப் போல எங்கும் சென்று மக்களைநல்வழிப்படுத்தியவர் புத்தர். அவர் ஒருநாள் ஒரு ஊருக்குள் சீடர்களுடன் வந்தார். இன்று மாலையில் புத்தரின் உபதேசம் இருக்கிறது. அனைவரும் வாருங்கள் என சீடர்கள் ஊர் மக்களுக்குத் தெரிவித்தனர். குடும்பத்திற்காக தியாகம் செய்த பெண்கள், உழைத்தும் பலன் பெற வறியவர்கள், உழைக்காமலே செல்வம் சேர்த்தவர்கள், நோயாளிகள், பெற்றோரைப் புறக்கணித்தவர்கள், அழகு, செல்வத்தால் கர்வம்கொண்டவர்கள் என ஊரில்உள்ள பலதரப்பினரும் ஓரிடத்தில் ஒன்றுகூடினர். தங்களுக்குள் கூடிப் பேசி ஒரு உறுதியான முடிவுடன் புத்தரை நாடிச் சென்றனர். உத்தமரே! பேச்சைக் கேட்பதால் எங்களுக்கு என்ன கிடைக்கப் போகிறது? நாங்கள் வாழ்வில் எத்தனையோ சொற்பொழிவுகளைக் கேட்டிருக்கிறோம். ஆனால், இதுவரை பலன் ஏதும் கிடைக்கவில்லை. அதனால், எங்கள் பிரச்னையைத் தீர்க்கும் மந்திரம் இருந்தால் சொல்லுங்கள். மனப்பாடம் செய்யும் விதத்தில் சிறியதாக இருந்தால் மிகவும் நல்லது. அப்படி நீங்கள் சொல்லி விட்டால் உங்களை மனதார ஏற்கிறோம் என்றனர்.புத்தரை மடக்கிய திருப்தி அனைவரின் முகத்திலும் தெரிந்தது.
புத்தரோ, இந்த நிலை மாறி விடும் என்று அழுத்தமாகச் சொல்லி விட்டு அங்கிருந்து புறப்பட்டார். கூட்டம் திகைத்துப் போய் நின்றது. அனைவரும் அதை மனதிற்குள் திரும்ப திரும்ப அதை சொல்லிக் கொண்டனர். அதன்பின், உழைக்காமல் செல்வம் சேர்த்தவர், இந்தப் பணம் நம்மிடமே நிலையாக இருக்காது. என்றாவது வேறொருவர் கைக்குச் சென்று விடும். அதற்குள் நாலு பேருக்காவது நல்லது செய்ய வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டார். நோய்வாய்ப்பட்டவர்,இந்த நிலை மாறி நோய் நீங்கி விரைவில் பூரண குணம் பெறுவேன், என்று மனதில் எண்ணினார்.அழகால் கர்வம் கொண்ட பெண், இந்த இளமையும், அழகும் என்னை விட்டு ஒருநாள் நீங்கி விடும். இனிமேல் அனைவரிடமும் அன்பு காட்டுவேன், என்று முடிவெடுத்தாள்.இப்படி ஒவ்வொருவரும் நல்ல முடிவுடன் அங்கிருந்து சென்றனர். புத்தர் சொன்ன மந்திரத்தை கல்வெட்டு போல மனதில் பதித்துக் கொண்டதால் வாழ்வில் அமைதியும், நிம்மதியும் அடைந்தனர். இந்த நிலை மாறி விடும் என்ற உண்மை இந்த காலத்திற்கும் பொருந்தும் தானே! |
|
|
|