|
உலகாளும் அம்பிகை வழிபாட்டிற்குரிய மாதம் ஆடி. வெற்றிச் சின்னமான அம்பிகையின் குங்குமத்தை, பாரதியார் எப்போதும் நெற்றியில் இட்டிருப்பார். சக்தி வணக்கம் குறித்து அவர் கூறியிருப்பதாவது: சக்தி வணக்கம் தேசமெங்கும் சாதாரணமாக இருந்தாலும், அதன் காரணத்தை மக்கள் தெரிந்து கொள்ளவில்லை. பொருள் தெரியாமல் சிலைகளைவணங்குவோருக்கும்,புராணக்கதை கேட்போருக்கும் தெய்வம் வரம் கொடுப்பதில்லை.சர்வமும் சக்திமயமே. கடவுளை ஆண்பாலாக கருதாமல், பெண்பாலாக கருதியே உலகத்தை லோக மாதா என்று குறிப்பிடுகின்றனர். ராமகிருஷ்ண பரமஹம்சர் என் தாய் காளி என்றே எப்போதும் சொல்வது வழக்கம். சக்தி வழிபாட்டை சாக்தம் என்று குறிப்பிடுவர். இந்த வழிபாடு துறவறத்தை ஆதரிக்கவில்லை. இது குடும்ப வாழ்வில் இருந்து, தேவ வாழ்க்கையை நோக்கி உயர வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்துவதாகும்.சைவம், வைணவம் இரண்டு சமயமும் பிரசித்தமாக இருந்தாலும், சக்தி வழிபாட்டின் அழுத்தம் மக்களின் மனதை விட்டு எப்போதும் நீங்கவில்லை. மதுரை சுந்தரேஸ்வரர், காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் என்றபெயர்களைக் காட்டிலும் மதுரை மீனாட்சி, காஞ்சி காமாட்சி என்ற பெயர்கள் அதிக பெருமை கொண்டு விளங்குகின்றன. மாரி, காளி என்ற பெயர்களில் பராசக்தியை உலகம் மிகுதியாகக் கொண்டாடி வருகிறது. ராஜா விக்ரமாதித்தன் மகாகாளியை வழிபட்டவர். அவர் காலத்தில் பாரத தேசத்தின் தலைமைக்கவியாக விளங்கிய காளிதாசர் சக்தியின் அருள் பெற்றார். வீர சிவாஜிக்கும் பவானியாகிய அம்பிகையே தெய்வம். சக்தியை வழிபடுவோரை சாக்தன் என்று குறிப்பிடுவர். சக்தி வழிபாடு வங்காள தேசத்தில் உயிர் கொண்டு வலிமை பெற்று நிற்கிறது. சக்தியால் உலகம் வாழ்கிறது. நாம் வாழ்வை விரும்புகிறோம். ஆதலால் சக்தியை வழிபடுவோம். |
|
|
|