|
தோரணமலை என்னும் ஊரில் மடம் ஒன்று இருந்தது. அந்த மடத்தில் குருவும், சீடர்களும் தங்கி இருந்தனர். அவர்கள் அனைவருமே முட்டாள்களாக இருந்தனர். சீடர்கள் அனைவரும் ஒருநாள் பேசிக் கொண்டு இருந்தனர். அவர்களில் ஒருவன், "நம் குருவிற்குத் தேவையான பாலை நாம் அலைந்து திரிந்து வாங்க வேண்டி உள்ளது. சில நாட்கள் பால் கிடைப்பதே இல்லை. கிடைக்கிற பாலும், தண்ணீர்ப் பாலாகவே உள்ளது, என்றான். ""நீ சொல்வது உண்மைதான். இதற்கு நாம் என்ன செய்ய முடியும்? என்றான் இன்னொருவன்.உடனே மற்றொருவன், "நாமே ஒரு நல்ல பசு மாடு வாங்கி விட்டால் என்ன? வேலையும் குறையும். வேளா வேளைக்கு நல்ல பாலும் கிடைக்கும், என்றான். ""அப்படியே செய்யலாம், என்றனர் மற்ற சீடர்கள். உடனே எல்லாச் சீடர்களும் குருவிடம் சென்றனர். மாடு வாங்கினால் நல்லது என்ற தங்கள் எண்ணத்தைத் தெரிவித்தனர். குருவும் இதற்கு ஒப்புக் கொண்டார். மாடு வாங்குவதற்காக சீடர்களிடம் பணத்தைத் தந்தார். பணத்துடன் சீடர்கள் மாடு வாங்குவதற்காகப் பக்கத்து ஊருக்குப் புறப்பட்டனர். வழியில் அவர்கள் எதிரே ஒருவன் வந்தான். அவனிடம், "எங்கள் குருவிற்கு நல்ல பசு மாடு வாங்குவதற்காக வந்துள்ளோம். எங்கே கிடைக்கும்? என்று கேட்டனர். இவர்களை முட்டாள்கள் என்று தெரிந்து கொண்டான் அவன், தன்னிடம் இருந்த முரட்டுப் பசு மாட்டை அவர்களிடம் தள்ளிவிட நினைத்தான்.
"என்னிடமே அருமையான பசுமாடு ஒன்று உள்ளது. நன்கு பருத்திருக்கும் அந்த மாடு ஏராளமான பால் கறக்கும். வீட்டிற்கு வாருங்கள்... மாட்டைப் பார்க்கலாம், என்று அவர்களை அழைத்துச் சென்றான். சீடர்களுக்கும் அந்த மாடு பிடித்து விட்டது. "என்ன விலை? என்று கேட்டான் ஒரு சீடன். "மற்றவர்களுக்காக இருந்தால் இருபத்தைந்து பணம். ஒரு பணம் குறைந்தாலும் விற்க மாட்டேன். நீங்கள் குருவிற்கு என்று கேட்பதால் இருபது பணத்திற்குத் தருகிறேன். இதைப் போன்ற நல்ல மாடு உங்களுக்கு எங்குமே கிடைக்காது, என்று இனிமையாகப் பேசினான் அவன். சீடர்களும் இருபது பணம் கொடுத்து அந்த மாட்டை விலைக்கு வாங்கினர். மாட்டை அவர்களிடம் தந்த அவன், ""நல்ல நேரம்தான் இந்த மாடு உங்களுக்குக் கிடைத்தது. நான் சொல்வதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். பால் கறப்பதற்கு முன் இதன் கால்களைக் கயிற்றால் கட்ட வேண்டும். யாராவது ஒருவர் கொம்பைப் பிடித்துக் கொள்ள வேண்டும். பிறகு பால் கறந்தீர்களானால் மாடு ஏராளமாகப் பால் தரும், என்றான். சீடர்கள் மாட்டை ஓட்டிக் கொண்டு குருவிடம் வந்தனர். நடந்ததை அறிந்த அவர், குறைந்த விலைக்கு மாட்டை வாங்கியதற்காகச் சீடர்களைப் பாராட்டினார்.
பால் கறக்கும் நேரம் வந்தது. ஒரு சீடன் ஓடிச் சென்று பால் கறக்கக் குவளை கொண்டு வந்தான். இன்னொருவன் பசுவின் காலைக் கட்டக் கயிறு கொண்டு வரச் சென்றான். கயிறு எங்கும் கிடைக்கவில்லை. வேறு வழி இல்லாத சீடர்கள் குருவை மாட்டின் அருகில் அமரச் சொன்னார்கள். அவரும் அப்படியே அமர்ந்தார். சீடர்கள் அவர் தலையில் இருந்த நீண்ட சடையால் மாட்டின் கால்களைக் கட்டினர். ஒரு சீடன் பால் கறக்கத் தொடங்கினான். ஆனால், அந்தப் பசுவோ உதைக்கத் தொடங்கியது. இதைப் பார்த்த இன்னொரு சீடன் மடத் திற்குள் ஓடினான். பெரிய ஊது கொம்பை அங்கே கொண்டு வந்தான். அவர்களைப் பார்த்து, ""மாட்டை விற்றவன் நம்மிடம் என்ன சொன்னான்? பால் கறக்கும் போது கொம்பைப் பிடிக்க வேண்டும் என்று சொல்லவில்லையா? நாம் அதை மறந்து விட்டோம். அதனால்தான் மாடு தகராறு செய்கிறது என்ற அவன் கொம்பைப் பிடித்து ஊதினான். சத்தத்தைக் கேட்டு மிரண்டது மாடு. தன்னைப் பிடித்திருந்த சீடர்களை முட்டித் தள்ளி விட்டு ஓடத் தொடங்கியது. அதன் கால்களில் குருவின் சடை கட்டப்பட்டு இருந்ததால், அவரையும் இழுத்துக் கொண்டு ஓடியது. வேதனை தாங்காமல் அலறினார் குரு. மாடோ மிரண்டு ஓடிக்கொண்டே இருந்தது. அவருடைய சடை அறுந்ததால், மிகவும் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையானார். முட்டாள் சீடர்களால் தனக்கு ஏற்பட்ட நிலைமையை எண்ணி வருந்தினர் குரு.
|
|
|
|