|
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சிவத்தலமான பாபநாசம் பாபநாச நாதர் கோவிலில் அருள்பவள் உலகம்மை. பாபநாசம் அருகிலுள்ள விக்கிரமசிங்கபுரத்தில் வசித்தவர் நமசிவாய கவிராயர். தினமும் தாமிரபரணியில் நீராடி, பக்தி பெருக்கில் அம்பிகையை வர்ணித்து பாடுவார். அவரது பெருமையை ஊரறியச் செய்ய அம்பிகை தீர்மானித்தாள். ஒருநாள் இரவில் நமசிவாயர் கோவிலில் இருந்து வீட்டுக்குத் திரும்பிக் கொண்டுஇருந்தார். வெற்றிலை, பாக்கு இட்டிருந்ததால், அவ்வப்போது துப்பியபடி நடந்தார். அவரை யாரோ பின் தொடர்வது போலிருந்தது. திரும்பிப் பார்த்தால் யாருமில்லை. மறுநாள் கோவிலைத் திறந்த அர்ச்சகர் அம்பிகையைக் கண்டு அலறினார். தரிசனத்திற்காக வந்த மன்னனிடம், அபசாரம் நடந்து விட்டது. உலகம்மையின் ஆடை முழுவதும் வெற்றிலை பாக்கு கறையாக இருக்கிறது. பார்க்கவே மனம் கூசுகிறது என்றார்.அரசரும் அது கண்டு அதிர்ந்தார். இரவு அரசரின் கனவில் உலகம்மை தோன்றினாள். மன்னா! நேற்றிரவு நமசிவாய புலவரின் பாடல்களைக் கேட்டுக் கொண்டே சென்றேன். அப்போது அவர் வெற்றிலை போட்டிருந்ததால், எச்சில் துப்பும் போது என் புடவையில் பட்டு விட்டது. அதையே காலையில் சன்னிதியில் கண்டாய். புலவர் என் மீது பாடிய பாடல்களை பாடுவோரின் வாழ்வு சிறக்கும், என்று சொல்லி மறைந்தாள். மன்னன் சேவகர்களை அனுப்பி, நமசிவாய புலவரை வரவழைத்தான்.
புலவரிடம், உலகம்மையின் ஆடையில் தாம்பூல எச்சிலை நீங்கள் உமிழ்ந்ததாக அறிந்தேன். இது நியாயமா? என்று கேட்டான்.நடந்த விபரம் ஏதும் தெரியாவிட்டாலும், புலவர் அம்பிகைக்கு அபசாரம் நிகழ்ந்ததை எண்ணி வருந்தினார். மன்னன் அவரிடம், நீர் உலகம்மையின் பக்தர் என்பது உண்மையானால், இந்த சபதத்தை ஏற்க வேண்டும். உலகம்மையின் கையில், ஒரு பூச்செண்டை நுõறு தங்க நுõல்கள் கொண்டு கட்டி வைப்போம். நீர் அன்னை மீது பாடல்களைப் பாடி, பக்தியின் வலிமையால், அந்த நுõல்களை அறுபடச் செய்ய வேண்டும். பூச்செண்டு உம் கைக்கு வர வேண்டும். என்றார். நமசிவாயரும் உலகம்மை பற்றி நுõறு பாடல்கள் பாடினார். ஒவ்வொரு நுõலாக அறுபட்டது. நுறாவது பாடல் பாடும் போது செண்டு புலவரின் கைக்கு வந்தது. இதைக் கண்ட மன்னன், உத்தமரே! அம்பிகையின் அருள் பெற்ற உமது பெருமையை ஊரறியவே இப்படி செய்தேன், என்று சொல்லி வணங்கினார். தன்னையும் ஒரு பொருட்டாக மதித்து உலகம்மை நடத்திய திருவிளையாடலை எண்ணி எண்ணி வியந்தார். அன்னையின் திருவடியை ஆனந்தக் கண்ணீருடன் வழிபட்டார் கவிராயர். |
|
|
|