|
மனதை அமைதிப்படுத்தும், தியானம் மனதை ஒருநிலைப்படுத்தும் தியானம், மனதை விரிவு படுத்தும் தியானம் ஆகியவற்றைப் பழகிய பிறகு, அறநூல்களில் கூறப்பட்டுள்ள பல்வேறு பண்புகளை தியானம் செய்ய வேண்டும். மெய்யறிவைப் பெற வேண்டுமானால், மனம் பண்பட்டிருக்க வேண்டும். மனதில் நல்ல பண்புகள் மேலோங்கியிருக்க வேண்டும். நற்பண்புகளின் இருப்பிடமாக விளங்கும் தூய மனமே மெய்யறிவைப் பெற்றுக் கொள்வதற்குரிய தகுதியுடன் இருக்கிறது. மனம் தூய்மையும் பக்குவமும் பெறவில்லை யென்றால் மெய்யறிவைப் பெற முடியாது. மெய்யறிவைப் பெற்றாலும் அது, ஓட்டைக் குடத்தில் ஊற்றிய நீரைப் போன்று பயனற்றதாகிவிடும்.
நோய் குணமாக வேண்டுமென்றால், மருந்தும் முக்கியம், பத்தியமும் முக்கியம். மருந்தைப் போன்றது மெய்யறிவு. பத்தியத்தைப் போன்றவை நற்பண்புகள். பத்தியத்தைக் கடைப்பிடிக்கவில்லையென்றால், மருந்து உரிய பலனைக் கொடுக்காது. பிறவி நோய் தீருவதற்கு மருந்தாகிய மெய்யறிவும், பத்தியமாக நற்பண்புகளும் மிகவும் முக்கியம். முதலில் பண்புகளின் முக்கியத்துவத்தை, மதிப்பை, சிறப்பை உணர்ந்துகொள்ள வேண்டும். அவற்றை அறிந்துகொண்டால்தான் அந்தப் பண்புகளைக் குறித்துத் தியானிக்க முடியும். ஒரு குறிப்பிட்ட பண்பு கடைப்பிடிக்க வேண்டிய ஒன்று என்பதை அறிந்தும், மனிதன் அறியாமையிலிருந்து உதித்த விருப்பு, வெறுப்பின் காரணமாக அந்தப் பண்பைக் கடைப்பிடிக்கத் தவறிவிடுகிறான். மனிதனின் மனதில் பலவிதமான கீழான இயல்புகள் குடிகொண்டிருக்கின்றன. அவற்றுக்கு மாறான நற்பண்புகளைத் தியானித்து உள்ளத்தில் ஆழப் பதித்துக்கொண்டால்தான், தீய பண்புகளை விடுத்து, நற்பண்புகளைக் கடைப்பிடிக்க முடியும். உள்ளத்தில் பேராசை, பெருங்கோபம், பொருட்பற்று, செருக்கு, பகுத்தறிவின்மை, பொறாமை ஆகிய தீய பண்புகள் உள்ளன. அவற்றுக்கு மாறான நற்குணங்களைத் தியானிக்க வேண்டும். மனதிலுள்ள பேராசை நீங்க வேண்டுமானால் திருப்தியை, நிறைவை தியானிக்க வேண்டும். கீதையில் பல இடங்களில் பகவான் ஆசையின் இயல்புகளைப் பற்றிக் கூறியுள்ளார். அவற்றை ஆழ்ந்து எண்ணி, அதிலிருந்து விடுபட முயல வேண்டும்.
உள்ளத்தில் கனன்று கொண்டிருக்கும் பெருங்கோபம் அகல வேண்டுமானால், அதற்கு மாறாக பொறுமையை தியானித்தல் வேண்டும். பொறுமையின் பெருமையை ஆழ்ந்து எண்ணுதல் வேண்டும். கோபத்தினால் விளையும் தீமைகளையும், பொறுமையினால் விளையும் நன்மைகளையும் நன்கு சிந்தித்துப் பார்க்க வேண்டும். மனதில் இயல்பாகவே பொருட்பற்று குடிகொண்டிருக்கும் எல்லாவற்றையும் தனக்கு உடைமையாக்கிக் கொள்ள வேண்டும். என்ற எண்ணம் மேலோங்கியிருக்கும் அனைத்தையும் தனக்குச் சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும். என்ற எண்ணத்துக்கு அடிப்படை பாதுகாப்பின்மையே ஆகும். பாதுகாப்பின்மைக்குக் காரணம். அறியாமை. அறியாமையின் விளைவாகிய பாதுகாப்பின்மையை நீக்கிக்கொள்ள வாழ்க்கையைப் பற்றிய பரந்த பார்வையை வளர்த்துக்கொள்ள வேண்டும். பிறருக்குக் கொடுத்து மகிழும் பண்பைப் பழக வேண்டும். பொருட்பற்றுக்கு மாறான ஈகையின் உயர்வை உள்ளத்தில் ஆழ்ந்து எண்ணிப் பார்க்க வேண்டும்.
அடுத்து, மனிதனின் மனதில் தோன்றும் குழப்பங்களுக்குக் காரணமான பகுத்தறிவின்மை, அறியாமையை நீக்கிக்கொள்ள முயலவேண்டும். அதற்குத் தெளிந்த பகுத்தறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும். உலகில் எது நிலையானது, எது நிலையற்றது என்பது குறித்து பகுத்தறிந்து, அந்தக் கருத்துக்களை ஆழ்ந்து சிந்தித்தல் ஒரு வகை பண்புத் தியானமாகும். சிறிது பணம், படிப்பு, அழகு இருந்து விட்டாலே மனிதனிடம் கர்வம் தலை தூக்கிவிடும். பணம் ஆள்பலம், இளமை - இவற்றைக் குறித்து கர்வம் கொள்ளாதே. காலம் ஒரு கணத்தில் இவற்றைக் கவர்ந்து சென்றுவிடும். என்பார் ஆதிசங்கரர், கர்வத்தை விலக்கி, அடக்கம் என்னும் அரிய பண்பை, பணிவாகிய செல்வத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். அடக்கத்தைக் குறித்து ஆழ்ந்து தியானித்து கர்வத்திலிருந்து விடுபட வேண்டும். அடுத்து, எப்பேர்ப்பட்டவரிடமும் பொறாமை என்ற தீய குணம் இடம் பிடித்துவிடுகிறது. பிறரது வளர்ச்சியைக் கண்டு பொறாமைப்படும். தீய குணத்தை அழுக்காறு என்ற சொல்லால் குறிப்பிடுகிறார் திருவள்ளுவர். பொறாமையை நீக்கிக் கொள்ள, அனைவரையும் மனம் திறந்து பாராட்டிப் பழக வேண்டும்.
எங்கு, எச்சிறப்பு காணப்படினும் அவை அனைத்தும் எனது மகிமையின் சிறுகீற்றே என்று பகவான் கிருஷ்ணர் கீதையில் கூறியுள்ளார். அனைத்துச் சிறப்புக்களையும் இறைமகிமையின் வெளிப்பாடாகக் காணுதல் மூலம் பொறாமையிலிருந்து விடுபடலாம். ஆசை, கோபம், பொருட்பற்று, பகுத்தறிவின்மை, கர்வம், பொறாமை, ஆகிய ஆறு தீய பண்புகளிலிருந்தும் விடுபட, திருக்குறளில் அவர் அறுத்தல், வெகுளாமை, ஈகை, அறிவுடைமை, அடக்கமுடைமை, அழுக்காறாமை, முதலிய அதிகாரங்களில் உள்ள குறட்பாக்களின் பொருளை உணர்ந்து தியானம் செய்ய வேண்டும். நாள்தோறும் இடைவிடாது இருபது நிமிடங்களாவது தியானம் செய்து பழக வேண்டும். ஒவ்வொரு பண்பையும் குறைந்தது ஆறு மாத காலமாவது தியானம் செய்ய வேண்டும். |
|
|
|