|
குரு ஒருவரை சந்தித்த செல்வந்தன் ஒருவன், சுவாமி! ஐந்து தலைமுறைக்கு வேண்டிய செல்வம் சேர்த்துவிட்டேன். ஏழு தலைமுறை இருக்கிறதென்று சொல்வார்கள். அதன்படி இன்னும் இரண்டு தலைமுறைக்கான சொத்தை எப்படிச் சேர்ப்பது என்பது என் கவலை. தாங்கள்தான் எனக்க நல்ல ஆலோசனை வழங்க வேண்டும்! என்றான். புன்னகைத்த குரு, நல்ல யோசனைதான். ஆனால் இந்த விஷயத்தில் எனக்கு அனுபவம் போதாது. என் பக்தன் ஒருவன் பக்கத்து ஊரில் தேரடித் தெருவில் வசிக்கிறான். அவனிடம் சென்று நான் அனுப்பியதாகச் சொல். நல்ல ஆலோசனை சொல்வான். போகும்போது வெறும்கையோடு போகாதே! என அனுப்பி வைத்தார். உடனே செல்வந்தன் கூடைகளில் பழங்கள் பட்சணங்கள், வெகுமதிப் பொருட்கள் என வாங்கிக்கொண்டு வண்டிகளில் ஏற்றி பக்தனைக் காணச் சென்றார்.
செல்வந்தரைக் கண்டதும் பக்தன் ஓடிவந்து, மரியாதையுடன் வரவேற்று அமரச் செய்து, நான் என்ன செய்யவேண்டும்? என்று பணிவுடன் கேட்டான். முதலில் வண்டிகளில் உள்ள பழங்கள் மற்றும் பட்சணக் கூடைகளை வீட்டுக்குள் வைக்கச் சொல்லுங்கள். பிறகு சொல்கிறேன் என்றான் செல்வந்தன். ஐயா! கடவுள் அருளால் இதற்கெல்லாம் தேவையில்லாத படி நிறைய இருக்கின்றன. என் மனைவி மதிய உணவைச் சமைத்து விட்டாள். இரவு உணவுக்கு என்ன செய்வது என்று மாலை முடிவு செய்வோம். நாளைக்குத் தேவை என்று நான் எதையும் தேடுவதில்லை என்றான் பக்தன். திகைத்த செல்வந்தன் விடை கிடைத்த திருப்தியில் குரு இருந்த திசை நோக்கி மானசீகமாய் வணங்கினான். |
|
|
|