|
ஹயக்ரீவன் என்னும் அசுரன் தேவர்களைத் துன்புறுத்தி வந்தான். குதிரை முகமும்,தேவ உடலும் பெற்றவரால் மட்டுமே தனக்கு அழிவு நேர வேண்டும் என்று அவன் பிரம்மாவிடம் வரம் பெற்றிருந்தான். அதற்காக திருமால் குதிரை முகத்துடன் அவதரிக்க வேண்டிய காலம் நெருங்கியது. இதற்காக ஒரு லீலையை நிகழ்த்தினார். இந்திரனின் நண்பனான ரேவந்தன், தேவலோக குதிரையான உச்சைஸ்ரவஸ் மீதேறி வைகுண்டம் வந்தான். ஆதிசேஷன் மீது திருமால் பள்ளி கொண்டிருந்தார். அவருடைய பாதத்தை வருடியபடி இருந்த லட்சுமி, குதிரையின் குளம்படி சத்தம் கேட்டுத் திரும்பினாள். அங்கு தேவலோக குதிரையான உச்சைஸ்ரவஸ் நின்றிருந்தது. அதன் அழகில் மனம் பறி கொடுத்தாள். திருமால், லட்சுமி! லட்சுமி! என்று பல முறை அழைத்தும் பதிலளிக்கவில்லை. கோபத்தில் திருமால், குதிரையின் அழகில் ஈடுபட்ட லட்சுமியை பெண் குதிரையாகப் பிறக்கும்படி சபித்தார். அவள் பூலோகத்தில் காளிந்தி நதியும், தமஸாநதியும் இணையும் இடத்திலுள்ள வனத்தில் குதிரை வடிவில் திரிந்தாள். திருமாலும் குதிரை முகம் கொண்டவராக வந்து அசுரனை வதம் செய்தார். அன்று முதல் திருமாலுக்கு ஹயக்ரீவர் என்ற பெயர் உண்டானது. ஹயக்ரீவர் என்பதற்கு குதிரை முகம் கொண்டவர் என பொருள். பெண் குதிரையாக வாழும் லட்சுமியுடன் இணைந்தார்.ஹயக்ரீவரை வணங்கினால் கல்விச் செல்வம் பெருகும். |
|
|
|