|
கண்ணனுக்கு ஒரு வயது. ஒருநாள் அவனை குளிப்பாட்டி, உடை மாற்றிக் கொண்டிருந்த போது, திடீரென குழந்தையின் கனம் அதிகரிப்பது போல உணர்ந்தாள். கனம் அதிகரிக்கவே, கையில் வைத்திருக்க முடியாமல் தொட்டிலில் இட்டாள். சிறிது நேரத்தில் கண்ணன் துõங்கி விட்டான். பின் வீட்டு வேலையில் ஈடுபட்டாள். அப்போது கம்சன் அனுப்பிய த்ருணாவர்த்தன் என்ற அசுரன், காற்று வடிவில் வீட்டிற்குள் நுழைந்தான். கண்ணனை துõக்கிக் கொண்டு ஆகாய வழியில் புறப்பட்டான். சற்றுநேரத்தில் கண்ணனை கவனிக்க வந்த யசோதை, அவனைத் தொட்டிலில் காணாததால் பதறிப் போனாள். குழந்தையை எங்கு தேடியும் காணவில்லை. அவள் அழ ஆரம்பித்தாள். ஊரார் கூடி தேட கிளம்பினர். இதனிடையே த்ருணாவர்த்தன் செல்லும் வழியில், கண்ணன் மலை போல கனக்க ஆரம்பித்தான். அந்த அசுரனால் கண்ணனை சுமக்க முடியவில்லை. என்ன செய்வதென தெரியாமல் விழித்தான். திடீரென அவன் கழுத்தை கையில் இருந்த குழந்தை நெரிக்க ஆரம்பித்தது. வலி தாங்காமல் வானில் இருந்து கீழே விழுந்தான். அவனது மரண ஓலம் எங்கும் எதிரொலித்தது. ஊரார் சப்தம் கேட்ட இடம் நோக்கி ஓடினர். அங்கே, குழந்தை கண்ணன் அசுரன் அருகில் சிரித்தபடி படுத்திருந்தான். அனைவரும் ஆனந்தம் அடைந்தனர். குழந்தையாய் இருந்தாலும் தெய்வம் தெய்வம் தானே! |
|
|
|