|
குசேலரின் மனைவி சுசீலை. இவள் பொருளுக்காக தன் கணவரை கிருஷ்ணரிடம் அனுப்பி வைத்தாள் என்று படித்திருக்கிறோம். இது ஒரு வகையில் உண்மையே என்றாலும், தான் வசதியாக வாழ்வதற்காக அவள் இந்தச் செயலைச் செய்யவில்லை என்பது பாகவதத்தை ஆழ்ந்து படித்தால் புரியும்.அர்ஜுனனின் பேரன், அபிமன்யுவின் மகன் பரீட்சித்து மகாராஜா. இவருக்கு ஒரு இக்கட்டான நிலை ஏற்பட்ட போது, சுகப்பிரம்ம முனிவர் அவருக்கு திருமாலின் சரிதத்தை எடுத்துரைத்தார். அதில் கிருஷ்ணாவதாரம் பற்றி அதிகமாகவே சொன்னார். கிருஷ்ணரும், குசேலரும் குருகுலத்தில் ஒன்றாகப் படித்தவர்கள் என்பதில் தொடங்கி, குசேலர் மீண்டும் கிருஷ்ணரை சந்தித்து அளவளாவிய காட்சி வரை தொடர்கிறார். குசேலர் மனதை அடக்கியவர். செல்வம் என்ற சிந்தனையே அவரிடம் கிடையாது. மனிதனின் அத்தியாவசியத் தேவை உணவும். உடையும். அவரோ அவரது மனைவியோ இந்த விஷயத்தில் கூட மிகவும் சாதாரணமாக இருந்தார்கள். அவர்கள் சரியாக சாப்பிடாததால் மிகவும் மெலிந்து காணப்பட்டார்கள்.
தன் நிலை பற்றி சுசீலை கவலைப்பட்டதே இல்லை. ஆனால், கணவர் இப்படி எலும்பும் தோலுமாய் இருக்கிறா@ர! அவருக்கு ஏதாவது ஒன்று என்றால் என்ன செய்ய முடியும்! அவர் நன்றாக இருக்க வேண்டுமே! என்ற நோக்கத்தில், தன் கணவரிடம் சென்றாள்.அன்பரே! தாங்கள் தங்கள் நண்பராகிய கிருஷ்ணரை சென்று பார்த்து வாருங்கள். அவர் மீது நீங்கள் நிறைந்த பக்தி கொண்டவர். உங்களை அவர்பார்த்தால், உங்கள் உடையையும், உடலையும் பார்த்தே நீங்கள் பரம ஏழையாய் இருக்கிறீர் என்பதைப் புரிந்து கொள்வார். தன் நண்பன் கஷ்டப்படுவதை அவர் சகிக்க மாட்டார். அவராகவே பொருளுதவி செய்வார், என்று மட்டும் தான் சொல்லி அனுப்பினாள்.அவரிடம் போய் பொருள் கேளுங்கள், என்ற வார்த்தையை அவள் பயன்படுத்தவில்லை.அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் (இஸ்கான்) ஸ்தாபக ஆச்சாரியரான சுவாமி பிரபுபாதா இந்தக் கருத்தை தெளிவுபட எழுதியிருக்கிறார்.
குசேலரும் அவ்வாறே செய்தார். சுசீலை நினைத்தது போலவே கிருஷ்ணரும் அவரது ஏழ்மையை புரிந்து கொண்டார்.நண்பரே! உமக்கு திருமணமாகி இருக்கும்என நம்புகிறேன். அவள் உமக்கு நிச்சயம் தகுந்த மனைவியாக இருப்பாள். ஆரம்பத்தில் இருந்தே உமக்கு குடும்ப வாழ்வில் நாட்டம் இருந்ததில்லை. நிறைந்த செல்வம் பெற வேண்டும் என்றும் எண்ணியதில்லை. இந்த உலகில் செல்வத்தை நாடாதவர்களைக் காண்பது மிகவும் அரிது. ஆனால், நீர் பற்றற்ற வாழ்க்கை நடத்துவதால் அதுபற்றி கவலை கொள்ளவில்லை. இருப்பினும், ஒரு குடும்பஸ்தனுக்கு செல்வம் அவசியமானதே! என்றவர், குசேலர் கொண்டு வந்த அவலை ஒரு பிடி அள்ளி வாயில் போட்டார்.உடனே அவரது கையைப் பிடித்துக் கொண்ட ருக்மிணியான லட்சுமி, இது மட்டும் போதும். உங்களுக்கு அளிக்கப்படுவது ஒரு பிடி அவலோ, ஒரு பூவோ, சிறிது தீர்த்தமோ எதுவாகவும் இருக்கட்டும். பக்திப்பூர்வமாக அது தரப்பட்டால், அந்த வீட்டுக்கு நான் செல்ல வேண்டியது என் கடமையாகிறது, என்றாள்.அதன்படி அவர் குசேலரின் இல்லத்துக்கு மட்டுமல்ல! அவரது ஊரையே செல்வச் செழிப்புள்ளதாக்கினாள்.இதைத் தான் வள்ளுவர்நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை என்றார். |
|
|
|