|
கிருஷ்ண பக்தரான அக்ரூரர் ஆயர்பாடியில் இருந்த கண்ணனையும், அவரது அண்ணன் பலராமரையும், கம்சன் ஆட்சி செய்த மதுரா நகருக்கு அழைத்து வந்தார். இவர்களைக் கண்ட மக்கள் அவர்களது அழகு கண்டு மெய் மறந்து நின்றனர். அப்போது அந்த வழியாக முதுகு வளைந்த வயதான பெண் ஒருத்தி சந்தனப் பேழையுடன் சென்று கொண்டிருந்தாள். அவளிடம் கிருஷ்ணர், குணத்தால் உயர்ந்த பெண்ணே! நறுமணம் மிக்க சந்தனத்தை யாருக்கு எடுத்துச்செல்கிறாய்? என்றார்.கம்ச ராஜாவுக்கு சந்தனம் அரைக்கும் பணிப்பெண் நான். ஒரு அசுரனுக்கு பணி செய்தே என் காலம் வீணாகி விட்டது. இன்றாவது இந்த சந்தனத்தை நல்லவர்களுக்கு அளித்து என் வாழ்வை பயனுள்ளதாக்கிக் கொள்கிறேன் என்று சொல்லி கிருஷ்ணருக்கும், பலராமருக்கும் சந்தனம் பூசினாள். கிருஷ்ணர் கை விரல்களால் அவளின் முக வாயையும், கால்களால் அவளின் பாதங்களையும் வேகமாக அழுத்தினார். கணப் பொழுதில் கூன் நிமிர்ந்த அவள் அழகிய இளம் பெண்ணாக மாறினாள். கிருஷ்ணருக்கு சேவை செய்த புண்ணியம் உடனடியாக பலன் கொடுத்ததை எண்ணி மகிழ்ந்தாள். இவள் யார் தெரியுமா? முந்தைய ராமாவதாரத்தில் கூனியாகப் பிறந்து ராமனைக் காட்டுக்கு அனுப்பிய மந்தரை. இன்னொரு பிறவியில், கிருஷ்ணருக்கு பணிவிடை செய்து பாவம் நீங்கப் பெற்றாள்.நம்பிக்கையோடு கண்ணனை வணங்கினால், வளைந்த கூன் நிமிர்ந்தது போல நடக்காதும் நடந்து விடும். கிருஷ்ண ஜெயந்தியன்று மறக்காமல் கிருஷ்ணர் கோவிலுக்குப் போய் உங்கள் வேண்டுதலை வைத்து விடுங்கள். மற்றதை அவன் பார்த்துக் கொள்வான். |
|
|
|