|
கோகுலத்தில் கண்ணனும், பலராமனும் தங்கள் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது பழம் விற்கும் பெண் வந்தாள்.கண்ணனுக்கு பழம் சாப்பிட ஆசை. அதை வாங்க கையில் காசு இல்லை. வீட்டு முற்றத்தில் குவிக்கப்பட்டிருந்த தானியத்தை கையில் அள்ளிக்கொண்டு, பழக்காரியை நோக்கி ஓடினான். குழந்தை அல்லவா! கையில் இருந்த தானியத்தின் பெரும்பகுதி கை இடுக்கு வழியாக கீழே சிந்திக் கொண்டிருந்தது. குழந்தை தன்னை நோக்கி ஓடி வருவதை பழக்காரி பார்த்து விட்டாள். கூடையை இறக்கி வைத்து விட்டு, அந்தக் கண்ணன் தள்ளாடி தள்ளாடி கையில் தானியத்தையும் அள்ளிக் கொண்டு ஓடி வரும் அழகை ரசித்தாள். எவ்வளவு பெரிய பாக்கியம் பாருங்கள்... கண்ணனை அந்தக் கோலத்தில் நம்மால் மனக்கண்ணால் மட்டும் தான்தரிசிக்க முடிகிறது! அவளோ, நேரில் அதைப் பார்த்தாள். கொடுத்து வைத்த மகராசி...!கண்ணன் கையில் எஞ்சிய தானியத்தைக் கூடையில் போட்டான். அவளோ, கை நிறைய பழங்களைக் கொடுத்தாள். எந்த லாப நோக்கும் அவளிடம் இல்லை. நான் சம்பாதிப்பதெல்லாம் எனக்காக அல்ல... அந்தக் கண்ணனுக்காக! எனக்கு என்ன வேண்டும். உண்ண உணவு.. உடுக்க ஒன்றிரண்டு ஆடை... குடியிருக்க ஒரு குடிசை...இவையெல்லாம் என்னிடம் ஏற்கனவே இருக்கின்றன. இனியென்ன! மற்றதை கண்ணனிடம்ஒப்படைப்போம்... என்ற மனநிலையுடன் கொடுத்தாள். வீட்டுக்குப் போய் பார்த்தாள். கண்ணன் போட்டிருந்த தானியமெல்லாம் நவரத்தினங்களாக மாறியிருந்தன. ஒரே நாளில் அவள் பெரும் பணக்காரி ஆனாள். கண்ணனுக்கு பக்தியோடு கொஞ்சம் பிரசாதம் வைத்து வணங்கினாலும் போதும். அள்ளித்தருவான் அந்த வள்ளல் பெருமான்! |
|
|
|