|
ஒரு சிறுவன் தூக்கத்தில் அடிக்கடி புலம்புவான். பெற்றோர் எழுப்பிக் கேட்டால், கனவில் சிங்கம் ஒன்று வந்து பயமுறுத்துவதாகச் சொல்வான். காலப்போக்கில் அவனது மனநிலை மிகவும் பாதித்தது. எதைப் பார்த்தாலும் பயப்பட ஆரம்பித்தான். பெற்றோர் அவனை மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்றனர். மருத்துவர் அவனிடம்,தம்பி! நீ பயப் படும் படியான எந்த உருவத்தைப் பார்த்தாலும் உடனே மனதிற்குள், எனது பழைய நண்பனாயிற்றே! என்னோடு நட்பு கொண்டவனாயிற்றே! இதைக் கண்டு ஏன் பயப்பட வேண்டும்! என்று சொல். அதன்அருகில் தைரியமாகப் போய் அதன் தலையில் தட்டு. உனக்கு இனி பயமே இருக்காது, என்றார்.சிறுவனும் அப்படியே செய்தான். சில நாட்களில் அவனது பயம் நீங்கியது.நமது வாழ்வில் துன்பம், ஏமாற்றம் போன்ற சிங்கங்களும், கரடிகளும் அடிக்கடி குறுக்கிடுகின்றன. அவற்றைக் கண்டு நாம் அஞ்சுகிறோம். அவை நம் வாழ்வில் குறுக்கிடும் சமயத்தில், உங்களைக் கண்டு நான் அஞ்சமாட்டேன். நீங்கள் என்னை தாக்குவதற்காக வரவில்லை. பரிசோதிக்கவே வந்திருக்கிறீர்கள். என் வாழ்வில் நீங்களும் ஓர் அங்கம் என்று உங்களுக்குள் நீங்களே சொல்லிக் கொள்ளுங்கள்.அந்த துணிச்சல் உங்களை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்லும். |
|
|
|