|
குரு ஒருவருடன் ஆன்மிகப்பயணம் மேற்கொண்ட சீடன் ஒருவன். ஓர் ஊரின் வழியே சென்றபோது, குருவே! இவ்வூரில்தான் என் அன்புத் தங்கை வசிக்கிறாள். நான் அவளையும், குழந்தைகளையும் பார்த்துவிட்டு உடனே வந்து விடுகிறேன். அதுவரை நீங்கள் இந்தக் கோயிலில் அமர்ந்திருங்கள் எனக் கூறிச் சென்றான். தங்கையையும், குழந்தைகளையும் நீண்ட காலத்திற்குப் பிறகு பார்த்ததால் மெய் மறந்த சீடன், இரண்டு நாட்கள் அங்கேயே தங்கி விட்டான். மூன்றும் நாள் காலை சீடனின், தங்கை, அண்ணா! நீங்கள் மட்டும் தான் இங்கு வந்தீர்களா? எனக் கேட்டதும், சீடனின் மண்டைக் குள் இடி.
அடடா... குருவை கோயிலில் அமர வைத்து விட்டு, இங்கு வந்து இரண்டு நாட்கள் ஆகிவிட்டதே... என்ன அநியாயமான செயல் இது! என்று மனம் பதறித்துடிக்க, கோயில் நோக்கி ஓடினான் சீடன். இந்நேரம் அங்கு குரு இருக்கமாட்டார் என்ற சந்தேகத்துடன் அங்கு சென்றவனுக்கு ஆச்சரியம்! குரு கோயிலிலேயே அமர்ந்திருந்தார். குருவே! என்னை மன்னித்துவிடுங்கள் சிறிது நேரத்தில் வருவதாகக் கூறிவிட்டு, இரண்டு நாட்கள் உங்களைக் காக்க வைத்துவிட்டேன். நான் வரவில்லை என்றதும் பயணத்தைத் தொடங்கி, வெகுதூரம் சென்றிருப்பீர்கள் என்று தவறாக நினைத்துவிட்டேன்! என்றான் சீடன். சீடனே! குரு-சிஷ்யன் உறவு என்பது வாக்குறுதியைக் காப்பாற்றுவது நீ என்னை இங்கே இருக்கச் சொன்னாய், இருக்கிறேன். அவ்வளவுதான்! எத்தனை நாட்கள் என்றாலும் உன் வரவுக்காக காத்திருப்பேன். இரண்டு நாட்கள் இறைவன் சன்னிதியில் அமர்ந்திருப்பது பெரும் பாக்யம் அல்லவா! இதில் வருத்தப்படவோ, வேதனைப் படவோ ஒன்றுமே இல்லை. தங்கை, அவள் கணவன், குழந்தைகள் நலமாய் உள்ளார்கள் அல்லவா? அதுதான் பேரின்பம். தன் குரு பொறுமையின் சிகரம் என்பதை உணர்ந்த சீடன் அவருடன் பெருமிதமாய் நடந்தான். |
|
|
|