|
ஊர் ஊராகச் சென்று ஆன்மிகப் பணி செய்து கொண்டிருந்த குரு ஒருவரிடம் வந்த நாத்திகன் ஒருவன், கடவுள் இருக்கிறான் என நீங்கள் நிரூபித்தால் நான் உங்கள் பக்கம் சேர்ந்து விடுகிறேன். இல்லையென ஆகிவிட்டால் என்பக்கம் நீங்கள் சேர்ந்து விடுகிறீர்களா? என சவால் விடுத்தான். ஒப்புக்கொண்ட, மகான், அங்கேயே சீடர்களைக் கொண்டு தகதகவென கொழுந்து விட்டு எரியும் அளவுக்கு நெருப்பு மூட்டச் சொன்னார். பின், அன்பரே! இந்த நெருப்பில் நான் கையை வைப்பேன். கை எரிந்தால் கடவுள் இல்லை என அர்த்தம். கை எரியாவிட்டால் கடவுள் இருக்கிறார் என்று அர்த்தம்! சொல்லியவாறே நெருப்பில் கை வைத்தார் கை எரியவில்லை. அதற்கு நாத்திகன், இப்போது, இதே நெருப்பில் நானும் கை வைக்கிறேன். என் கையும் எரியாவிட்டால், நீங்கள் நாத்திகப் பாதைக்குத் திரும்பவேண்டும்! எனக் கூறியவாறே. அவனும் நெருப்பில் கை வைக்க, அவன் கையும் எரியவில்லை. அதைக் கண்ட நாத்திகன் எகத்தாளமாகச் சிரிக்க, அப்போது, மகானே! நீங்கள் தோற்கவில்லை. நீங்கள் நெருப்பில் முதலில் கை வைத்ததால், அது எரிக்கும் தன்மையை இழந்துவிட்டது. பின்னர் அவன் கை வைத்ததால்தான் அவன் கை எரியவில்லை. அவன் முதலில் வைத் திருந்தால், நிச்சயம் கை எரிந்து போயிருக்கும்! என்று இறைவனின் குரல் அசரீரியாக ஒலித்தது. இப்போது நாத்திகன் மகானின் பாதம் வீழ்ந்தான். |
|
|
|