|
மன்னன் புரூரவர் வம்சத்தில் வந்த காதி மகாராஜாவிற்கு சத்யவதி என்றொரு மகள் இருந்தாள். அவளைத் தனக்கு மனைவியாக்கும்படி ரிஷிகா என்ற முனிவர். மன்னனைக் கேட்டுக் கொண்டார். ஆனால் மன்னனோ, முனிவரே! நான் குசவம்சத்தைச் சேர்ந்தவன். நாங்கள் செல்வச் சிறப்புடைய சத்ரியர்கள் என்பதால், என் மகளுக்கு நீங்கள் சீதனம் (ஸ்ரீதனம்) தர வேண்டும். எனவே இடமோ, வலமோ ஒரு காது கருப்பாகவும், நிலவெளி போல் பிரகாசமும் பொருந்திய ஆயிரம் குதிரைகள் நீங்கள் கொண்டு வர வேண்டும் என்று கூறினார். காதி மகாராஜாவின் நிபந்தனையைக் கேட்ட ரிஷிகா முனிவர். வருண தேவனிடம் சென்று, காதி கேட்ட ஆயிரம் குதிரைகளைப் பெற்று வந்தார். பின் அக்குதிரைகளை காதியிடம் ஒப்படைத்து, அவரது மகள் சத்யவதியை மணம் முடித்தார். அதன்பின் ஒருநாள், ரிஷிகாவின் மனைவியான சத்யவதியும், அவருடைய மாமியாரான காதி மகாராஜாவின் மனைவியும், ரிஷிகாவை அணுகி, தங்கள் இருவருக்கும் தனித்தனியாக ஒரு குழந்தை கிடைக்கும் வண்ணம் யாக நிவேதனம் செய்ய வேண்டினர்.
ரிஷிகா முனிவரும் தனக்கு பிராமண தன்மையுள்ள குழந்தை வேண்டி, தன் மனைவிக்குரிய நிவேதனத்தை பிராமண மந்திரத்தை உச்சரித்தும், சத்ரியரான காதியின் மனைவிக்கு நல்லதொரு சத்ரிய குழந்தை வேண்டி சத்ரிய மந்திரத்தை உச்சரித்தும், நிவேதனம் செய்தார். பின் குளிப்பதற்காக அவர் வெளியே சென்றார். அதற்கிடையில் ரிஷிகா முனிவர், அவருடைய மனைவியான சத்யவதிக்கு செய்துள்ள நிவேதனம் கண்டிப்பாக தனக்குச் செய்யப்பட்டதை விட சிறந்ததாக இருக்கும் என்றெண்ணிய சத்ய வதியின் தாய், சத்யவதிக்கு செய்யப்பட்ட நிவேதனத்தை தனக்கு அளிக்கும் படி சத்யவதியிடம் கேட்டாள். சத்யவதியும் தனக்கென உருவாக்கப்பட்ட நிவேதனத்தை, தன் தாயிடம் கொடுத்து விட்டு, தாயின் நிவேதனத்தை தான் உண்டாள். குளித்து விட்டு வீடு திரும்பிய ரிஷிகா முனிவர் நடந்ததை புரிந்து கொண்டார். தன் மனைவியிடம் அவர், நீ பெருந் தவற்றைச் செய்து விட்டாய். உனக்கு பிறக்கும் மகன், எல்லோரையும் தண்டிக்கக் கூடிய கொடூரமான ஒரு சத்ரியனாக இருப்பான். ஆனால் உன் தாய்க்குப் பிறக்கும் உன் சகோதரனோ, பிரம்ம ஞானத்தில் சிறந்தவனாக விளங்குவான் என்று கூறினார்.
அதைக் கேட்டு கவலை கொண்ட சத்யவதி, அமைதியான வார்த்தைகளால், ரிஷிகா முனிவரை சமாதானப்படுத்தி, தன் மகன் கொடூரமான ஒரு சத்ரியனாக இருக்க வேண்டாம் என்று வேண்டினாள். ரிஷிகா முனிவரும், அப்படியானால், உன் பேரன் கொடூரமான ஒரு சத்ரியனாக இருப்பான் என்று பதிலளித்தார். இவ்வாறாக, ரிஷிகா முனிவரின் வார்த்தைப் படி, காதி மகாராஜாவின் மகனாக விஸ்வாமித்திரர் பிறந்தார். அவர் சத்ரிய குலத்தில் பிறந்தாலும், இறுதியில் பிரம்மரிஷியாக போற்றப்பட்டார். அதே சமயம் , சத்யவதியின் மகனான ஜமதக்னிக்கு மகனாகப் பிறந்த பரசுராமரோ பிராமண வம்சத்தில் பிறந்தும், சத்ரியராகச் செயல்பட்டார். காதி மகாராஜாவிற்கு பின் அவருடைய மகனான விஸ்வாமித்திரர் நாட்டின் பொறுப்பேற்று, நீண்ட காலம் நல்லதொரு மன்னனாக ஆட்சி புரிந்து வந்தார். ஒரு முறை விஸ்வாமித்திரர், ஒரு அக்ஷௌணி படையுடன், உலகை வலம் வந்தார். அப்போது ஒரு முறை சகல வளங்களும் பொருந்திய வசிஷ்ட முனிவரின் ஆஸ்ரமத்திற்கு அவரும் அவரது படை வீரர்களும் வந்து சேர்ந்தனர்.
வசிஷ்டருக்கு விஸ்வாமித்திரர் நமஸ்காரம் செய்ய, வசிஷ்டரும் அவரை வரவேற்று ஆசனம் அளித்தார். ஆசனம் அளித்து, பழங்கள் அளித்தார். விஸ்வாமித்திரரும் பதிலுக்கு ஆஸ்ரமத்தில் உள்ளவர்களை குசலம் விசாரித்தார். பின் வசிஷ்டர் விஸ்வாமித்திரருக்கு அவரது படை வீரர்களுக்கும் பெரிய விருந்தொன்றை அளிக்க விரும்பினார். ஆஸ்ரமத்தில் வாழும் வசிஷ்டருக்கு அது கடினம் என்றெண்ணிய விஸ்வாமித்திரரோ, அதற்கு பணிவுடன் மறுத்தார். ஆனால் மறுபடி, மறுபடி வசிஷ்டர் வற்புறுத்த, இறுதியில் விஸ்வாமித்திரர், அவருடைய உபசரிப்பிற்கு ஒப்புக் கொண்டார். உடனே வசிஷ்டர் அவருடைய காமதேனுவான சபாலா பசுவை அழைத்து, ஓ சபாலா! இங்கு வந்து நான் கூறுவதை செய்வாயாக. இம் மன்னருக்கும், அவருடைய படை வீரர்களுக்கும் நல்விருந்தோம்ப விரும்புகிறேன். உடனே அதற்கான ஏற்பாடுகளைச் செய்வாயாக. அறுசுவை உணவுகளை போதுமான அளவிற்கு எனக்காக அளிப்பாயாக என்று கூறினார்.
அவ்வாறே சபாலா பசுவும் விதவிதமான, சுவையான சகல வித உணவுப் பதார்த்தங்களையும், அவரவர் விருப்பத்திற்கேற்ப அளித்தது. விஸ்வாமித்திரரும், அவருடைய படைவீரர்களும், போதுமான அளவிற்கு திருப்தியுடன் அவ்வுணவு வகைகளை உண்டு களித்தனர். உண்டபின் அவர்கள் மேலும் பலமும் ஆனந்தமும் பெற்றனர். அதன் விஸ்வாமித்திரர், வசிஷ்டரிடம், முனிவரே! நான் ஒரு லட்சம் பசுக்கள் தருகிறேன், எனக்கு சபாலாவை கொடுங்கள். அனைத்து செல்வங்களும், அரசனுடன் இருக்க வேண்டும். ஆகவே இந்த பசுவும் எனக்குச் சொந்தமானதே என்று கூற பதிலாக வசிஷ்டர், எவ்வகையிலும் என்னால் சபாலா பசுவை தர இயலாது. என்னை பயமுறுத்தியும் இந்த பசுவை என்னிடமிருந்து பிரிக்க முடியாது. அது என்னுடன் என்றும் இணைபிரியாதது. இப்பசுவை எனக்கு, என்னுடைய யாக காரியங்களுக்கு வேண்டிய அனைத்துப் பொருட்களையும் அளிக்கிறது என்று கூறி முடித்தார். விஸ்வாமித்திரரும் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட 4000 யானைகள், நான்கு குதிரைகள் பூட்டிய 800 தங்கரதங்கள் என்று பலவாறாக அளிப்பதாகக் கூறி மாறி மாறி தன்னிடம் சபாலா பசுவை அளிக்க வேண்டினார். ஆனால் வசிஷ்டரோ மசியவில்லை. இதனால் கோபம் அடைந்த விஸ்வாமித்திரர், வலுக்கட்டாயமாக சபாலா பசுவை கடத்தி செல்ல முயன்றார். அதனால் துன்பம் அடைந்து கண்ணீர் பெருகிய பசு, வசிஷ்டர் தன்னை கைவிட்டதாக எண்ணியது. இறுதியாக வசிஷ்டரிடம் சரணடைந்து, தன்னைக் காப்பாற்ற வேண்டியது. எனக்கு கட்டளையிடுங்கள், நான் விஸ்வாமித்திரரின் கர்வத்தை அடக்குகிறேன். என்று கூறியது.
வசிஷ்டரும் சபாலாவிடம் எதிரியின் கர்வத்தினை அடக்கும் படை ஒன்றை உருவாக்க வேண்டினார். சபாலாவும் படை ஒன்றை உருவாக்கி விஸ்வாமித்திரரின் படையை அடியோடு அழித்தது. விஸ்வாமித்திரரின் நூறு மகன்களும் அழிக்கப்பட்டனர். வருத்தமடைந்த விஸ்வாமித்திரர் சிவபெருமானிடம், தனக்கு மேலும் ஆயுதங்கள் தர வேண்டினார். பின் அவ்வாயுதங்களைப் பெற்ற விஸ்வாமித்திரர், வசிஷ்டரின் ஆஸ்ரமத்தினை முற்றிலும் அழித்தார். இதனால் கோபமடைந்த வசிஷ்டர் விஸ்வாமித்திரரின் ஆயுதங்களை அனைத்தையும் பலமிழக்கச் செய்தார். இறுதியாக விஸ்வாமித்திரர், பிரம்மாஸ்திரத்தை எய்ய, அதுவும் வசிஷ்டரால் பலமிழக்கச் செய்யப்பட்டது. அதைக் கண்ட விஸ்வாமித்திரர், தன்னுடைய சத்ரிய படைபலன்கள் ஒன்றும், வசிஷ்டரின் பிரம்ம தேஜஸின் முன் பலம் இல்லாது இருப்பதைக் கண்டார். வசிஷ்டரால் இவ்வாறு தோற்கடிக்கப்பட்ட விஸ்வாமித்திரர், பழங்களையும் வேர்களையும் உண்டு பெரும் தவம் ஒன்று செய்ய, தெற்கு பகுதிக்குச் சென்றார்.
ஆயிரம் வருடங்கள் தவத்திற்கு பின், பிரம்மா அவர் முன் தோன்றி, நீ ராஜரிஷியாக ஆகக் கடவாயாக என்று ஆசீர்வதித்தார். ஆனால் விஸ்வாமித்திரரோ, நான் இவ்வளவு நீண்ட தவம் இருந்தும், நான் ராஜரிஷியாக மட்டுமே கருதப்படுகிறேன். இது என்னுடையத் தவத்திற்கு ஏற்ற பலனல்ல எண்றெண்ணிய விஸ்வாமித்திரர் மீண்டும் மிகப்பெரிய தவம் ஒன்றை செய்ய ஆரம்பித்தார். ஆயிரம் வருடங்கள மறுபடியும் தவம் செய்த பின், தேவர்கள் புடைசூழ வந்த பிரம்மா அவரை மகாமுனி ஆகக் கடவதாக என்று ஆசீர்வதித்தார். ஆனால் அதனாலும் திருப்தி அடையாத விஸ்வாமித்திரரோ, மேலும் பெருந் தவம் ஒன்றை செய்ய ஆரம்பித்தார். ஆனால் இந்திரனால் அனுப்பி வைக்கப்பட்ட மேனகா, அவருடைய தவத்தைக் களைத்து சீரழித்த பின், நீண்டகாலம் கழித்த பின் அதை உணர்ந்த விஸ்வாமித்திரர், நடுங்கிய மேனகாவை, இனிமையான வார்த்தைகள் கூறி அனுப்பி விட்டு, தன்னுடைய காமத்தை அடக்கி, நிலையான ஒரு மனநிலையை அடைய வேண்டி இமயமலையை நோக்கி மீண்டும் தவம் செய்யச் சென்று விட்டார்.
கவுசிகி நதிக்கரையில் இவ்வாறு ஆயிரம் வருடங்கள் தவம் செய்ய, விஸ்வாமித்திரர் ஆரம்பித்தவுடன் பயம் கொண்ட தேவர்கள். பிரம்மாவை அணுகி வேண்டினார். பிரம்மாவும் விஸ்வாமித்திரரை அணுகி, முனிவர்களிடையே நீ மகத்துவமும், முக்கியத்துவமும் பெற்றவர் ஆவீர் என்று ஆசீர்வதித்தார். அதனால் திருப்தி அடையாத விஸ்வாமித்திரரோ, பிரம்மாவிடம், என்னுடைய தவத்தால், பிரம்மரிஷி என்ற நிலையை அடைந்தால் மட்டுமே நான் திருப்தி அடைவேன் என்று கூற, பிரம்மாவோ பதிலாக, முனிவரே! இப்போது உங்களுடைய புலன்கள் இன்னும் வெற்றி கொள்ளப்படவில்லை. அதற்கு முயற்சி செய்வீராக என்று கூறிச் சென்று விட்டார். விஸ்வாமித்திரரோ தன் இரு கரங்களையும் உயர்த்தி காற்றை மட்டும் சுவாசித்து கடுந்தவம் இருக்க ஆரம்பித்தார். குளிரிலும், கோடையிலும் இவ்வாறாக கடுந்தவத்தை இன்னும் ஒரு ஆயிரம் ஆண்டுகள் விஸ்வாமித்திரர் செய்தார். விஸ்வாமித்திரரின் இந்நிலை தேவர்கள் அனைவருக்கும் பெரும் பயத்தைக் கொடுத்தது, அவர்கள் தேவலோக மங்கையான ரம்பையை அவருடையத் தவத்தைக் கலைக்க அனுப்பினர்.
இந்திரனால் தனது தவத்தைக் கெடுக்க ரம்பை அனுப்பி வைக்கப்பட்டதை உணர்ந்த விஸ்வாமித்திரர், அவ்வளவு பெரிய தவம் செய்தும், தன்னுடைய கோபத்தை அடக்க முடியாமல், என்னைக் கவர்ந்து தவத்தை கெடுக்க நினைத்த துரதிர்ஷ்டமான பெண்ணே ரம்பா! நீ பாறை போல் நிற்பாயாக என்று சாபமிட்டார். பின் தன்னுடைய கோபத்தால் சாபமிட்டு சக்தியை இழந்த விஸ்வாமித்திரர், மனம் உறுத்தப்பட அவருடைய புலன்கள் இன்னும் கட்டுப்படாமல் இருப்பதால் மன அமைதி இழந்தார். பின் நான் எக்காலத்திலும் என்னுடைய கோபத்திற்கு பழியாகப் போவதில்லை. சாபமிடப் போவதும் இல்லை. என்னுடைய புலன்களைக் கட்டுப்படும் வரை நூறாண்டு காலங்கள் நான் மூச்சையும் கூட அடக்கி, தவம் செய்யப் போகிறேன் என்று கூறினார். அவ்வாறாக அவர், மீண்டும் ஓராயிரம் வருட காலங்கள் தவம் செய்தார். இமயமலையை விட்டு நீங்கிய அவர், கிழக்குப் பகுதியை அடைந்து கடுமையான தவத்தில் ஈடுபட்டார். யாராலும் செய்ய முடியாத கடுந்தவம் செய்தார் இவ்வாறாக ஆயிரம் வருடங்கள் தவம் முடிந்த பின், அவருடைய இதயத்தில் துளிக் கோபமும் தோன்றவில்லை.
பின் அவருடைய ஆயிரம் வருடகால தவம் முடிந்த பின், அவர் தனது உணவை உண்ணப் போகும்போது, பிராமண ரூபத்தில் வந்த இந்திரன், அவ்வுணவை வேண்ட விஸ்வாமித்திரரும், முழு விருப்பத்துடன் அவ்வுணவு முழுவதையும் அவனுக்கு அளித்துவிட்டார். தான் பசியால் வாடினாலும், தான் ஊமை போல் இருக்கும் விரதத்தை நிறைவேற்றினார். பின் மறுபடியும் ஆயிரம் வருடங்கள் சுவாசத்தைக் கட்டுப்படுத்தி, ஆயிரம் வருடங்கள் விஸ்வாமித்திரர் தவம் இருக்க, தீச்சுவாலைகள் அவர் தலையில் இருந்து வெளிவந்தன. அதன் வெப்பத்தால் உலகங்கள் அனைத்தும் தகிக்கப்பட தேவர்கள் அனைவரும் பிரம்மாவை அணுகி, மகாமுனியான விஸ்வாமித்திரர், நம்மால் பலவகையில் கோபப்படுத்தப்பட்டாலும், ஆசை காட்டப்பட்டாலும் அவற்றால் பாதிக்கப்படாமல், கவர்ச்சி, கோபம், உணர்ச்சி வயப்படுதல் இவற்றை தாண்டிய பிரம்ம ரிஷி நிலையில் உள்ளார். அவரிடம் எந்தக் குறைபாடுகளும் காணப்படவில்லை. அவருடைய விருப்பம் நிறைவேற்றபடாவிடில், அவர் மூவுலகங் களையும் அழித்து விடுவார் என்று கூறினர்.
பின் பிரம்மாவின் தலைமையில் அனைத்துத் தேவர்களும் விஸ்வாமித்திரரை அணுகினர். பிரம்மா அவரிடம், நீ பிரம்மரிஷி ஆகக் கடவாயக என்று ஆசீர்வதித்தார். ஆனால் விஸ்வாமித்திரரோ, வசிஷ்டர் வாயால், தான் பிரம்ம ரிஷி என்றழைக்கப்பட்õலொழிய தன்னுடைய நீண்ட கால விருப்பம் நிறைவேறாது என்று கூறினார். இறுதியாக தேவர்கள் வசிஷ்டரிடம் வேண்ட வசிஷ்டரும், அங்கு வந்து, விஷ்வாமித்திரரை பிரம்மரிஷி என்று ஆசீர்வதித்தார். விஸ்வாமித்திரரும், சக பிரம்மரிஷியான வசிஷ்டரை மரியாதையுடன் வணக்கம் செய்தார். இவ்வறாக விஸ்வாமித்திரர், அமைதி, கட்டுப்பாடு, தவம், தூய்மை, பொறுமை, நேர்மை, ஞானம், விஞ்ஞானம், ஆஸ்திகம் என்று பகவத்கீதை 18.42ல் கூறப்பட்ட படி, பிராமணருக்குரிய அனைத்து குணங்களையும் படிப்படியாக தன் தவத்தால் அடைந்தார். இவ்வாறாக சத்ரியராக பிறந்திருந்தும், கோபம், காமம் மற்றும் அனைத்து குணங்களையும் படிப்படியாக அடக்கி, பிரம்ம ரிஷியாக விஸ்வாமித்திரர் உயர்வு பெற்றார். அதாவது தன்னுடைய குணத்தாலும், செயலாலும் தான் பிரம்ம ரிஷித் தன்மையை அடைந்தார்.
ரிஷிகா முனிவரின் வார்த்தைகள் படி, அவருக்கும் சத்யவதிக்கும் மகனாக ஜமதக்னி பிறந்தார். ஜமதக்னியின் மகனாக சத்ரிய குணம் பொருந்திய பரசுராமர் பிறந்தார். பிறகு ரஜோ மற்றும் தமோ குணங்களினால் இருமாப்பு கொண்டு சாஸ்திரங்கள் வகுத்த சட்டத் திட்டங்களைப் பற்றி கவலைப்படாத அரசர்களை பரசுராமர் இருபத்தொருமுறை கொன்று அழித்தார். இப்படியாக பிராமண குலத்தில் பிறந்திருந்த பரசுராமர், ஒரு சத்ரியராக செயல்பட்டார். ஜமதக்னி முனிவரிடம் இருந்த விரும்பியதை வழங்கக்கூடிய காமதேனு பசுவை, கார்த்தவீர்யார் ஜூனன் என்ற மன்னன் அடைய விரும்பினான். பலவந்தமாக காமதேனுவை தன்னுடைய தலைநகரமான மாஹிஷ்மதிக்கு கொண்டு சென்றான். இதைக் கேள்விப்பட்ட ஜமதக்னியின் இளையப்புத்திரரான பரசுராமர், கார்த்தவீர்யார் ஜூனனின் தலைநகரம் சென்று 17 அக்ஷௌணி படைகளை தனியாக போரிட்டு அழித்தார். கார்த்தவீர்யார்ஜூனனை வெட்டி வீழ்த்தினார். கார்த்தவீர்யார்ஜூனனின் பத்தாயிரம் மகன்களும் ஓடி ஒளிந்தனர். காமதேனுவை மீட்டு வந்து தன் தந்தையிடம் ஒப்படைத்தார்.
ஆனால் பரசுராமரின் செயலால் வருத்தப்பட்ட ஜமதக்னியோ, மன்னிக்கும் குணத்தை வளர்த்துக் கொள்வதே ஒரு பிராமணரின் கடமையாகும். பரம புருஷரான ஹரி, மன்னிப்பவர்களிடம் மகிழ்ச்சியடைகிறார். நீ அரசனைக் கொன்றதால் பாவம் செய்து விட்டாய். ஆகையால் இப்போது நீ கிருஷ்ண உணர்வு உடையவனாகி, புண்ணிய ஸ்தலங்களை வழிபடுவாயானால் இப்பாவத்திற்கு பரிகாரம் தேட இயலும் என்று கூறினார். அவ்வாறே பரசுராமரும், ஒருவருடம் தீர்த்த யாத்திரை முடித்து, தன் தந்தையின் ஆஸ்ரமத்திற்கு திரும்பினார். ஒரு சமயம் பரசுராமர் ஆஸ்ரமத்தில் இல்லாத போது, கார்த்தவீர்யார்ஜூனன் மகன்கள் பழி தீர்க்க, ஜமதக்னி ஆஸ்ரமத்தை அணுகினர். பரசுராமரின் தாயான ரேணுகா, அவர்களிடம் தன் கணவருக்கு உயிர்ப்பிச்சை அளிக்க மன்றாடியும், யாகசாலையில் தியானத்தில் அமர்ந்திருந்த ஜமதக்னியை அவர்கள் கொன்று, அவருடைய தலையை துண்டித்து எடுத்துச் சென்றனர். சோகத்தால் பீடிக்கப்பட்ட பரசுராமரின் தாயாரான ரேணுகா, தன் புதல்வன் பரசுராமரை நினைத்துக் கதற, திரும்பி வந்த பரசுராமர், தன் தந்தையின் உயிரற்ற உடலை சகோதரர்களிடம் ஒப்படைத்து விட்டு, உலகின் அனைத்து சத்ரியர்களுக்கும் ஓர் முடிவு கட்டும் எண்ணத்துடன் தனது பரசை (கோடாரியை) கையில் ஏந்தினார். முதலில் மாஹிஷ்மதி சென்று கார்த்தவீர்யார்ஜூனனின் மகன்கள் அனைவரின் தலைகளையும் கொய்து, மலை போல் குவித்தார். பின் இருபத்தோறு தடவைகள் சத்ரிய குலத்தைச் சேர்ந்த அனைவரையும் கொன்று, சியமந்த பஞ்சகம் என்ற இடத்தில் ஒன்பது ஏரிகளை உருவாக்கி, அவற்றை அவர்களுடைய இரத்தத்தினால் நிரப்பினார். பின் யாகம் செய்து தந்தையை மீண்டும் உயிர்ப்பித்தார்.
இவ்வாறாக பிராமணராக பிறந்ததும், பரசுராமர், சத்ரியராகவே செயல்பட்டார். இவ்வாறாக பகவத்கீதை 18.43ல் குறிபிட்டுள்ளபடி, வீரம், வலிமை, மன உறுதி, வளமை, போரில் புறங்காட்டாமை, தானம் தலைவனாகும் தகுதி ஆகிய சத்ரியருக்குரிய குணங்களில் பரசுராமர் செயல்பட்டதால், அவர் சத்ரியரே. இவ்வரலாற்றில் பிராமண புத்திரரான பரசுராமர், சத்ரியராக செயல்பட்டார். ஆனால் சத்ரிய குலத்தில் பிறந்து அவருடைய உறவினராகிய விஸ்வாமித்திரரோ, மிகப்பெரும் தவத்தால் புலன்களை கட்டுப்படுத்தி, பிராமணருக்குரிய தகுதியைப் பெற்று, பிரம்மரிஷி ஆனார். இவ்வாறாக பகவத்கீதை 4.13ல், குணத்தையும், கர்மத்தையும் பொறுத்து, நான்கு சமுதாயப்பிரிவுகளை, நான் உருவாக்கி உள்ளேன் என்று கிருஷ்ணர் கூறும் வார்த்தைகள் மேற்கூறிய வரலாற்றால் உறுதிப் படுத்தப்படுகிறது. அதாவது ஒருவருடைய சமூகப் பிரிவானது, பிறப்பால் அல்ல. அவருடைய குணங்களும், செயல்களுமே அவருடைய சமூகப் பிரிவை நிர்ணயிக்கின்றன. மேலும் எக்குலத்தில் பிறந்தாலும், ஒருவர் எக்குலத் தகுதியைப் பெறுகிறாறோ, அக்குலத்தைச் சேர்ந்த வராகவே அவர் கருதப்படுகிறார். உதாரணமாக பிராமண குலத்தில் பிறந்திருந்தாலும், அவருடைய குணத்தாலும், செயலாலும், பரசு ராமர் சத்ரியரே! சத்ரிய குலத்தில் பிறந்திருந்தாலும், விஸ்வாமித்திரர், அவருடைய குணத்தாலும், செயலாலும் பிராம்மணரே! |
|
|
|