|
கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ளது தாடகை மலை, ஒரு பெண் தலைவிரி கோலமாகச் செங்குருதி தோய படுத்திருப்பது போல் காட்சி தரும் இந்த மலை ராமாயண காலத்துடன் சம்பந்தப்பட்டது. அரக்கி தாடகையும் அவளது கூட்டத்தினரும் முனிவர்களை யாகம் நடத்த விடாமல் பலவிதங்களில் இடையூறு செய்தனர். விசுவாமித்திரர், தசரத மகாராஜாவிடம், யாகம் இடையூறின்றி நடைபெறுவதற்கு ராம-லட்சுமணர்களை சில காலம் தம்முடன் அனுப்புமாறு கேட்டுக் கொண்டார். தசரதரும் அவர்களை அனுப்பி வைத்தார். செல்லும் வழியிலேயே தாடகை தோன்றி இடையூறு செய்தாள். அவள் பெண் என்பதால் அவள் மீது கணை தொடுக்க யோசித்தார். இதைக் கவனித்த விசுவாமித்திரர் ராமனிடம், இவள் பெண் அல்ல; அரக்கி, அவளை வதம் செய்வதால் தர்மம் நிலைக்கும் என்றார்.
ராமர், தரையில் ஊன்றியிருந்த வில்லை உயர்த்தி, நாணேற்றி அம்பு தொடுத்தார். தாடகை வீழ்ந்தாள். ராமர். வீல் ஊன்றி இருந்த இடம் வில்லுக் கீறி என்று அழைக்கப்படுகிறது. அம்பு துளைத்து தாடகை வீழ்ந்த இடத்தை திருச்சனம் கோப்பு என்பர். திருச்சரம் கோப்பு என்ற பெயர்தான் சிதைந்து திருச்சனம் கோப்பு ஆனது. இதற்கு ஆதாரமாக யாக குண்டங்களும், ராமரின் பாதச் சுவடுகளும் இங்கு காணப்படுகின்றன. தாடகையை வதம் செய்த பாவம் நீங்க ராமர் இவ்வூரில் சிவலிங்கத்தை நிறுவி வழிபட்டார். ராமர் பிரதிஷ்டை செய்து வழிபட்ட சிவலிங்கத்தின் பெயர் ராகேஸ்வரர். ராமர் முதன் முதலில் லிங்கம் நிறுவி வழிபட்ட கோயிலை இன்றும் இங்கு தரிசிக்கலாம். |
|
|
|