|
உலக வாழக்கையில் ஒவ்வொருவரும் துன்பத்தைக் குறைக்கவும், சுகத்தைப் பெறவும் முயற்சி செய்கின்றனர். ஆனால் செய்யும் முயற்சிகள் அனைத்தும் துன்பத்தையே அதிகப்படுத்துகின்றன என்றும் நிலை சரியாவதிவில்லை. ஒரு துன்பம் நீங்கினால், மற்றொரு துன்பம் உருவாகிறது. அல்லது ஒரு துன்பம் நீங்க செய்யப்படும் முயற்சி, மற்றொரு துன்பத்தை உருவாக்குகிறது. இவ்வாறாக துன்பச் சங்கிலித் தொடர்கிறது. இதற்கு சரியான ஒரு எடுத்துக்காட்டு, பிரம்மச்சாரி பூனை வளர்த்த கதை ஆகும். தனது குருவின் எளிய ஆஸ்ரமத்தில் தங்கி பயிற்சி பெற்று வந்த பிரம்மச்சாரி ஒருவர், தனது குரு தீர்த்தயாத்திரை சென்ற போது, ஆஸ்ரமத்தில் தங்கி தனது ஆன்மீகப் பயிற்சியைத் தொடர்ந்தார். ஆனால் அவருடைய எளிய உடைகளை எலிகள் தொடர்ந்து கடித்து நாசம் செய்து வர, அவர் ஊராரிடம் அடிக்கடி சென்று, துணிகள் கேட்டார். ஊரார்களோ, ஏன் இவ்வளவு கஷ்டப்படுகிறீர்கள்? ஒரு பூனை வளர்த்தால் போதுமே! எலிகள் தொந்தரவு செய்யாதே! என்று பூனை வளர்க்கக் கூறி பூனை ஒன்றைக் கொடுத்தனர்.
ஆனால் பூனைக்குப் பால் பெற, மறுபடியும் அவர் ஊராரிடம் செல்ல, அவர்கள் ஏன் பாலுக்காக தினசரி அலைகிறீர்கள்? ஒரு பசு தருகிறோம், அதன் பாலை நீங்கள் பூனைக்கும் அளிக்கலாம். உங்கள் தேவைக்கும் எடுத்துக் கொள்ளலாம் என்று கூறி அவரிடம் பசு ஒன்றை அளித்து வளர்க்கக் கூறினர். ஆனால் பசுவிற்கு புல்லும், இறையும் தேடி தினசரி பிரம்மச்சாரி ஊராரிடம் மறுபடியும் செல்ல, ஊரார் அவரிடம், ஏன் இவ்வளவு சிரமப்படுகிறீர்கள்? ஒரு சிறிய நிலம் தருகிறோம். அதில் நீங்கள் பசுவிற்கு தேவையான புல்லும் வளர்க்கலாம். உங்களுக்குத் தேவையான உணவுகளையும், காய்கறிகளையும் உருவாக்கலாம் என்று கூறி ஒரு நிலத்தை அளித்தனர். ஆனால் நிலத்தைப் பராமரிக்க வேலை ஆட்களும், அவர்களுக்குத் தங்கும் வசதிகளும் பெருக, வேலைகளும் பெருக, துன்பங்களும் பெருகியது. கூடிய விரைவில் அந்தப் பிரம்மச்சாரி ஒரு பெரிய சம்சாரி ஆகிவிட்டார். அவருடைய ஆன்மீக வாழ்க்கை அடியோடு அழிந்து விட்டது தனக்கு அளிக்கப்பட்ட அனைத்தையும் நிர்வகிப்பதிலேயே அவருடைய காலம் கழிந்தது. ஒருநாள் அவருடைய குரு திரும்பி வர, சீடனின் நிலைக்கண்டு பரிதாபப்பட்டு, அவருக்கு அறிவுரை கூறி அவரை பழைய நிலைக்கு, எளிய வாழ்க்கைக்கு அழைத்துச் சென்றார். |
|
|
|