|
கங்கைக் கரையோரம் ராமகிருஷ்ண பரமஹம்சர் தமது சீடர்களுக்கு தத்துவ உபதேசம் செய்து கொண்டிருந்தார். விவேகானந்தர் குருநாதரின் உபதேசத்தை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தார். திடீரென அங்கே நாய்கள் குரைத்ததால் சீடர்களின் கவனம் சிதறியது. குப்பைத் தொட்டியில் கிடந்த எலும்பைக் கவ்விக் கொண்டு ஒரு முரட்டு நாய் வெளியில் குதித்தது. அந்த நாயைச் சுற்றி மற்ற நாய்கள் குரைத்தன. ஆனால், அந்த முரட்டு நாயோ மற்றவற்றை சட்டை செய்யாமல் வாயிலிருக்கும் எலும்பை சுவைப்பதிலேயே கவனமாக இருந்தது. இதனைக் கண்ட ராமகிருஷ்ணர், தம் சீடர்களிடம் இந்த நாய்களிடமிருந்து என்ன தெரிந்து கொள்கிறீர்கள்? என்றார்.
சீடர்கள் ஆளுக்கொரு பதிலைச் சொன்னார்கள். ஒரு சீடர், நாய்களின் இயல்பு இதுதானே! என்றார். மற்றொரு சீடர், வலிமைதான் எப்போதுமே ஜெயிக்கும் என்றார். எதிலும் முந்தியவர்க்கே முதன்மை. முரட்டுநாய் எலும்பை எடுப்பதில் முந்திக் கொண்டது என்றார் மூன்றாவது சீடர். இறுதியில், விவேகானந்தர் தத்துவ ரீதியாக இக்காட்சியை விவரித்தார். அந்த முரட்டு நாய் அமைதியாக உணவை சுவைப்பது போல, கடவுளை அறிந்த ஞானிகள் அமைதியில் ஒன்றி விடுவார்கள். கடவுளை அறியாதவர் மட்டுமே வாழ்க்கையைப் பற்றி எதையாவது பிதற்றிக் கொண்டு எல்லாம் தெரிந்தவர்போல் ஆரவாரம் செய்வார்கள் என்றார். |
|
|
|