|
கர்நாடகாவில் வியாசராஜர் என்ற மகான் இருந்தார். ஒருமுறை, பக்தர் ஒருவர் அவரிடம் ஆசி பெற வந்தார். வியாசராஜருக்கு ஒரு தார் வாழைப்பழம் கொடுத்து விட்டுப் புறப்பட்டார். அவற்றை சீடர்களுக்கு வழங்கிய வியாசராஜர், சீடர்களே... இந்த பழத்தை யார் கண்ணிலும் படாமல் மறைவான இடத்தில் இருந்து சாப்பிடுங்கள், என்றார். எதற்காக குரு இப்படி சொல்கிறார் என புரிந்து கொள்ளாத சீடர்கள், சுவர், மரம் என ஆளுக்கொரு மறைவிடம் நோக்கி ஓடினர். கனகதாசர் என்ற சீடர் மட்டும், குருநாதர் முன் தயங்கியபடி நின்றார்.வியாசராஜர், கனகதாசா! ஏன் இங்கேயே நிற்கிறாய்? ஏதாவது மறைவிடம் பார்த்து ஓடு, என்று கட்டளையிட்டார்.குருநாதரே! மனிதர்களின் கண்ணில் படாமல் வேண்டுமானால் என்னால் ஒளிய முடியும். ஆனால், கடவுளின் பார்வையில் இருந்து என்னால் தப்ப முடியாதே? நான் இந்த பழத்தை சாப்பிடுவதை அவர் பார்க்கத்தானே செய்வார், என்றார் கனகதாசர் பணிவுடன். இந்த அறிவுப்பூர்வமான கேள்வியைக் கேட்ட வியாசராஜர் மனம் நெகிழ்ந்தார். கனகதாசா....கடவுள் எங்கும் நிறைந்திருப்பதை நீ உணர்ந்து விட்டாய். உனக்கு அவரின் அருள் பூரணமாக கிடைக்கும், என்று வாழ்த்தினார். கனகதாசர் என்னும் இந்த சீடர் பின்னாளில், கன்னட மொழியில் பக்தி கீர்த்தனைகள் பாடி புகழ் பெற்றார்.
|
|
|
|