|
குருநாதர் ஒருவர் தினமும் காலையில், கடவுளே! இன்றைய பொழுது நல்ல பொழுதாக அமைய வேண்டும், என்றும், இரவில், இந்த நாள் சிறப்பாக அமைந்தது. எங்களுக்கு உணவளித்த கடவுளுக்கு நன்றி, என்றும் சொல்லி பிரார்த்தனை செய்வார். இதற்கான காரணத்தை சீடர்கள் கேட்டர். மனிதன் ஒருநாளும் நன்றி மறப்பது கூடாது. அதனால் தான், தினமும் இரவு கடவுளுக்கு நன்றி சொல்லி பிரார்த்திக்கிறேன், என்று விளக்கமளித்தார் குரு. அந்த குருநாதர், தன்னை தரிசிக்க வரும் பக்தர்கள் தனக்கு அளிக்கும் பழங்களை மட்டுமே உணவாக ஏற்று வந்தார். ஒருமுறை சீடர்கள் அவரை சோதிக்க எண்ணினர். பழங்களை குருவிடம் கொடுக்காமல், அவரை பட்டினி போட்டால் என்ன மாதிரி பிரார்த்திக்கிறார் என்று கேட்க ஆசைப்பட்டனர்.மறுநாள் குருநாதருக்கு ஒரு பழம் கூட சீடர்கள் அளிக்கவில்லை. குருநாதா! இன்று ஒரு பக்தர் கூட உங்களைக் காண வரவில்லை. அதனால் சாப்பிட பழமும் இல்லை, என்று பொய் கூறினர். குருநாதர் அதைப் பொருட்படுத்தவில்லை. இரவு வந்தது. அவர் சோர்வாக இருந்தார்.இருப்பினும், கடவுளே.... இந்த நாள் சிறப்பாக அமைந்தது. இன்று பசியைக் கொடுத்த உமக்கு நன்றி, என்று சொல்லி விட்டு துõங்கப் புறப்பட்டார்.இறைவன் உணவைக் கொடுத்தாலும் சரி... பசியைக் கொடுத்தாலும சரி...எல்லாவற்றையும் ஒன்று போல் பார்க்கும் அவரது மனவலிமையை எண்ணி வெட்கப்பட்டனர். நடந்ததை குருவிடம் கூறி மன்னிப்பு கேட்டனர்.
|
|
|
|