|
குஜராத்தில் பஞ்சம் தலை விரித்தாடியது. மக்கள் வறுமையில் வாடியதைக் கண்ட வள்ளல் ஜகடுசாஹ், இவர் ஒரு சேட். அன்ன சத்திரம் கட்டி உணவிட்டார். வீட்டில் சமைக்க விரும்புபவர்களுக்கு பொருட்களைத் தானம் அளித்தார். ஆனால், சிலர் கை நீட்ட கூச்சப்படுவதைக் கண்டார். ஒரு அறிவிப்பை வெளியிட்டார். நான் ஒரு திரைச்சீலைக்குப் பின் அமர்ந்து கொள்வேன். தானம் பெறுவோர் தங்களின் கையை திரைக்குள் நீட்டினால் போதும்... வேண்டியது கிடைக்கும், என்றார். இந்த வள்ளலின் புகழ் ஊரெங்கும் பரவியது. மன்னர் வீசல்தேவ் இது பற்றி கேள்விப்பட்டார். தனக்குரிய தர்ம சிந்தனை இந்த சேட்ஜிக்கும் இருக்கிறதே....! என்று வியந்தார். நேரில் சென்று சேட்ஜியை பரிசோதிக்க விரும்பினார். ஒரு ஏழை போல வேஷமிட்டுக் கொண்டு, வள்ளலின் வீட்டுக்குச் சென்றார். மக்களோடு மக்களாக நீண்ட நேரமாக வரிசையில் நின்றார். தன் முறை வந்ததும், திரைச்சீலைக்குள் கையை நீட்டினார். சேட் அவரது கையில் ஒரு வைர மோதிரத்தை வைத்தார். அதைப் பார்த்ததும் மன்னர் வியப்பில் ஆழ்ந்தார். போதும் என்று நினைக்காமல், இன்னொரு கையையும் நீட்ட, அதில் இன்னொரு வைர மோதிரத்தை வைத்தார் சேட். மன்னருக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ஏழையாக வந்த மன்னர் மோதிரங்களுடன் அரண்மனைக்குப் புறப்பட்டார். அடுத்தநாள் சேட்ஜிக்கு மன்னரிடம் இருந்து அழைப்பு வந்தது.
மன்னர் அவரிடம்சேட்ஜி! உங்களுக்கு சாமுத்ரிகா லட்சணம் ஏதும் தெரியுமா? திரைக்குள் கை நீட்டினால் உமக்கு என்ன புரியும்? என்று கேட்டார் மன்னர். கையைப் பார்த்தால் வந்திருப்பவர் யார் என்பதை என்னால் யூகிக்க முடியும். அதற்கேற்ப என் உதவியின் அளவு அமையும். மற்றபடி சாமுத்ரிகா லட்சணமெல்லாம் எனக்குத் தெரியாது, என்றார் சேட். அப்படியானால், நேற்று அங்கு வந்த போது எனக்கு என்ன கொடுத்தீர்கள்? என்றார் மன்னர். மகாராஜா! நீங்கள் கையை நீட்டியதும், நாடாளும் மன்னரின் கை இது என்பது தெரிந்தது. விலை உயர்ந்த பொருளை உங்களுக்கு வழங்கினால், அதன் மூலம் நல்லவர்கள் பயன் பெறுவர் என்று தோன்றியது. அதனால் தான் இரண்டு வைர மோதிரங்களைக் கொடுத்தேன், என்றார். பெருமைக்காக இல்லாமல், மற்றவர்கள் நலம் பெற வேண்டும் என்ற பொதுநல நோக்குடன் வாரி வழங்கிய சேட்ஜியை கட்டியணைத்தார் மன்னர். உம்மைப் போல நல்லவர் ஊருக்கு ஒருவர் வாழ்ந்தாலே போதும். உலகம் நன்மை பெறும் என்று வாழ்த்தினார். அவருக்கு பெரும் பொருள் வழங்கி தர்ம சத்திரங்கள் அமைக்க உதவி செய்தார்.
|
|
|
|