|
கிருஷ்ணர் கீதையில் என்ன சொல்கிறார் தெரியுமா? உன்னால் முடிந்த செயல்களைச் செய். மற்றதை விட்டு விடு, என்கிறார். இவர் இப்படி சொல்லி விட்டாரே என்பதற்காக, நாம் ஏதுமே செய்யாமல் இருந்து விட முடியுமா! கிருஷ்ணர் சொன்னதை சரியாக புரிந்து கொள்ள வேண்டும். நீ செய்ய நினைப்பதை வெற்றிகரமாக முடிக்க முடியுமா என்று ஆரம்பத்திலேயே யோசி. முடியாது என தெரிந்து விட்டால் வீணாக அதில் போய் இறங்காதே! என்பது தான். இதன் அடிப்படையில் தான் பல அறிஞர்களும் கருத்து சொல்லியிருக்கிறார்கள். இதோ ஒரு கதை!சத்யகாமர் என்ற மகா முனிவர் இருந்தார். அவர் அக்னி ஹோத்திரம் என்ற வழிபாட்டை காட்டில் நடத்திக் கொண்டிருந்தார். இது மிகவும் கஷ்டமானது. தினமும் இரண்டு முறை வேறு செய்ய வேண்டும். இந்த வழிபாடு முடியும் வரை நெருப்பு அணையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த சமயத்தில் சத்யகாமருக்கு தீர்த்த யாத்திரை செல்ல வேண்டும் என்று ஆசை ஏற்பட்டது. வழிபாட்டை பாதியில் விட்டு விட்டு வெளியூர் செல்ல முடியாதே என்று நினைக்கும் வேளையில், உபகோசலன் என்ற சிறுவன் அங்கே வந்தான். சுவாமி! உங்களிடம் கல்வி கற்க வந்துள்ளேன், என்றான். உடனே அவர்,சரி...உனக்கு வித்தை கற்றுத் தர வேண்டுமானால், இந்த அக்னி ஹோத்திரத்தை தொடர்ந்து நீயே நடத்த வேண்டும். நான் தீர்த்த யாத்திரை கிளம்புகிறேன்.
வருவதற்கு இரண்டு மாதம் ஆகும். அதுவரை இதை கவனமாக பார்த்துக் கொள்வாயா? என்றார். உபகோசலன் மகிழ்வுடன் தலையாட்டினான். சத்யகாமர் கிளம்பி விட்டார். உபகோசலன் வழிபாட்டை கவனமாக செய்து வந்தான். இரண்டு மாதம் கழிந்தது. சத்யகாமர் வரவில்லை. ஆனாலும், உபகோசலன் வழிபாட்டை விடவில்லை.அதன் மீது ஈடுபாடு அதிகரித்தது. இதனால் மகிழ்ந்த அக்னிதேவன் சிறுவன் முன் தோன்றி, தன் மீது கொண்ட பக்திக்காக எல்லா வித்தைகளையும் அவன் அறியாமலேயே கொடுத்து விட்டு சென்று விட்டான். சத்யகாமர் 12 வருடம் கழித்து திரும்பினார். உபகோசலன் வழிபாட்டை விடாமல் நடத்திக் கொண்டிருப்பதையும், அவன் முகத்தில் ஏதோ ஒரு பிரகாசம் தெரிவதையும் கண்டார். வித்தை கற்றவர்களுக்கு அத்தகைய தேஜஸ் முகத்தில் தெரியும். நான் வருவதற்குள் நீ யாரிடம் வித்தை கற்றாய்? என்று அவர் கேட்க, சுவாமி! நான் தங்கள் வருகைக்காகவே காத்திருந்தேன். நீங்கள் இட்ட பணியை சிரத்தையுடன் செய்து வருகிறேன். யாரிடமும் வித்தை கற்கவில்லை, என்றான். சத்யகாமர் அதை நம்பவில்லை. அவனை வெளியே போகும்படி கத்தினார். அப்போது அக்னி தேவனே நேரில் தோன்றி நடந்ததைச் சொன்னான். நடுங்கிப் போன சத்யகாமர் சீடன் காலிலேயே விழுந்து விட்டார். பார்த்தீர்களா! தனக்கு கொடுக்கப்பட்ட ஒரு வேலையை உபகோசலன் எப்படி செய்தான் என்று! இப்படி நம்மால் எந்த செயலையும் பொறுமையுடன் வெற்றிகரமாக முடிக்க முடியும் என்றால் அதைச் செய்ய வேண்டும். முடியாது என தெரிந்தால், அதை விட்டு விட்டு, பெருமாளே! என்னால் என்ன செய்ய முடியுமோ, அதற்கு பாதை காட்டு, என அவன் திருவடியில் சரணடைந்து விட வேண்டும். இந்த ஆண்டின் புரட்டாசி சனிக்கிழமை சிந்தனை இது தான்! |
|
|
|