|
குருகுல பாடம் முடிந்து ஊர் சென்ற சீடன் ஒருவன், மீண்டும் குருவிடம் வந்து தங்கியவாறே, குருவே! தங்களிடம் நான் படித்ததெல்லாம் மறந்து விட்டது. மீண்டும் அந்தப் பாடங்களை சொல்லிக் கொடுப்பீர்களா? எனக் கேட்டான். இதற்கா இத்துணை தயக்கம் உட்கார் சொல்லித் தருகிறேன்! என்ற குரு, சீடனுக்கு முதலில் இருந்து பாடங்களை சொல்லித் தந்தார். நன்றி குருவே, பாடங்கள் நன்கு விளங்கி விட்டன. சென்று வருகிறேன். எனக் கிளம்பிய சீடன், ஒரு மாதத்திற்குப் பின் மீண்டும் குருவிடம் வந்து, சுவாமி, எனக்கு மீண்டும் பாடங்கள் மறந்து போய்விட்டன. சொல்லித் தருவீர்களா? எனக் கேட்க, புன்னகைத்த குரு, அதனாலென்ன... போதிக்கிறேன் எனக் கூறி, போதனையை ஆரம்பித்தார். சில நாட்களுக்குப் பின் நன்றி கூறி விடைபெற்றான் சீடன்.
அவன் போனதும், மூத்த சீடன் ஒருவன், குருவே! அவன் மீண்டும் மீண்டும் வருகிறான். நீங்கள் சொல்லித் தந்துகொண்டே இருக்கிறீர்களே! இது முறையா? முட்டாளான அவனால் கிரகிக்க முடியவில்லை என்றால் அவனை வர வேண்டாம் என்று சொல்ல வேண்டியதுதானே? என்றான். தரிசு பூமியாக இருந்தாலும் அந்த இடத்தைப் பதப்படுத்தி, தண்ணீர் ஊற்றினால் விரைவில் விளைநிலமாக மாறிவிடும் அல்லவா? அதுபோலத்தான் அவனும். அவன் பதப்படும் வரை சொல்லிக் கொடுக்க வேண்டியது ஆசிரியரான என் கடமை! என குரு சொல்ல, அவரது மேன்மை உணர்ந்தான் மூத்த சீடன். |
|
|
|