|
போதும்! திருப்தியா சாப்பிட்டேன் என்று சொல்லும் விதத்தில் திவச வீட்டில் சாப்பாடு தடபுடலாக இருக்க வேண்டும் என்பர். இதற்காக, எர்ணாகுளம் உன்னி கிருஷ்ணன் தன் தந்தையின் திவச சாப்பாட்டை விசேஷமாக செய்திருந்தார். ராமன் என்பவர் சாப்பிட வந்திருந்தார். வயிறு முட்ட சாப்பிட்ட அவர் திருப்தி! திருப்தி! என்று இலையை விட்டு எழுந்தார். தட்சிணையைப் பெற்றுக் கொண்ட அவர் திண்ணையில் வந்து அமர்ந்தார். அந்த நேரம் பக்கத்து வீட்டில் பலாப்பழ பாயசம் (சக்கை பிரதமன்) தயாராகிக் கொண்டிருந்தது. அதன் ஏலக்காய் வாசனையில் மனம் பறி கொடுத்த ராமன், ஆசையுடன் ஜன்னல் வழியாக பார்த்தார். ராமனின் ஆவலைக் கண்ட அந்த வீட்டு தலைவர், பாயசம் வேணுமா உமக்கு? என்றார். ராமனும் தலையசைக்க, பாயசமும் வந்து விட்டது. ராமன் விருப்பமுடன் குடித்து முடித்தார்.இதைப் பார்த்த உன்னி,பாயசத்திற்கு மட்டும் வயிற்றில் இடம் இருக்கா? என்று கேட்டார்.வயிறு முட்டச் சாப்பிட்டதால் தான் திருப்தி என்றேன். இருந்தாலும் சக்கை பிரதமன் என்பதால் எப்படியோ இடம் வந்து விட்டது, என்றார். அதெப்படி முடியும்? என்றார் உன்னி. பத்மநாபசுவாமி கோவில்ல திருவிழா கூட்டம். எள் போட இடமில்லை. ஆனா, திருவனந்தபுரம் மகாராஜா திடீர்னு தரிசனத்துக்கு வந்தா கோவிலுக்கு வெளியவா நிறுத்த முடியும்? கூட்டத்தை விலக்கி அனுப்புறதில்லையா? என்று விளக்கம் கொடுத்தார் ராமன்.இது கேட்டு சிரித்த உன்னி, நீர் சரியான சாப்பாட்டு ராமன் என நிரூபித்து விட்டீர் என்றார்.
|
|
|
|