|
அந்தணன் ஒருவன் தோட்டம் அமைத்து, அதைக் கண்ணும் கருத்துமாகத் காப்பாற்றி வந்தான். ஒரு நாள் பசு ஒன்று தோட்டத்தை நாசம் செய்து விட்டது. அதைக் கண்ட அந்தணன் பசுவை அடிக்க, அது இறந்து போய் விட்டது. அந்தணன் பசுவைக் கொன்று விட்ட செய்தி ஊர் முழுவதும் பரவியது. மற்றவர் முன் தன்னை ஒரு வேதாந்தி என்று காட்டிக்கொள்ளும் இந்த அந்தணன், தமது அனைத்துச் செயல்களுக்கும் ஒரு காரணத்தைக் கண்டுபிடித்து வேதாந்த முறையில் பதில் சொல்லி சமாளிப்பது அவனது வழக்கம். ஊர் மக்கள், அந்தணராகிய நீங்கள் பசுவைக் கொன்றது மகாபாவம் என்று சொன்னார்கள். அதற்கு அவன், நான் பசுவைக் கொல்லவில்லை. என்கையே பசுவைக் கொன்றது. கைக்கு இந்திரனே அதிதேவதையாக இருப்பவன். எனவே பசுவைக் கொன்ற பாவம் இந்திரனையே சேரும் என்று சொல்லி வந்தான்.
அந்தணன் இப்படிச் சொன்னதை இந்திரன் கேள்விப்பட்டான். இந்திரன் ஒரு வயதான அந்தணர் உருவத்தில், தோட்டத்துச் சொந்தக்காரனான அந்தணரிடம் சென்று, சுவாமி! இந்தத் தோட்டம் யாருடையது? என்று கேட்டான். எனக்குத்தான் சொந்தமானது என்றான் அவன். தோட்டம் மிக அழகாக இருக்கிறது. உங்கள் தோட்டக்காரன் நல்ல திறமைசாலியாக இருக்க வேண்டும். அதனால்தான் இந்த மரங்களை இவ்வளவு அழகாகவும் வரிசையாகவும் நட்டிருக்கிறான். இது நான் செய்த வேலை. என் யோசனைப்படி, எனது மேற்பார்வையிலேயே தோட்டக்காரன் இம்மரங்களை நட்டான் என்றான். அப்படியா இதே இந்தப் பாதையை யார் போட்டது? வெகு நேர்த்தியாகப் போடப்பட்டிருக்கிறதே?
இதையும் நான்தான் செய்தேன் என்று மகிழ்வுடன் சொன்னான் அந்தணன். அனைத்தையும் கேட்ட இந்திரன், அந்தணரே! இவையெல்லாமே உங்களுடையவை என்று சொல்கிறீர்கள். இத்தோட்டத்தில் நடைபெற்றிருக்கும் வேலைகள் அனைத்தையும் நீரே செய்ததாகவும். அவற்றுக்கு உரிய பெருமை எல்லாம் உங்களுக்கே சேர வேண்டும் என்றும் சொல்லி விட்டீர்கள். அப்படியிருக்கும்போது பசுவைக் கொன்ற பாவத்துக்கு மட்டும் இந்திரனை உட்படுத்துவது நியாயமாகுமா? என்று கேட்டு மறைந்து போனான். கடவுள் ஒருபோதும் தீமைகளால் தீண்டப்படாதவர். எப்போதும் தூய்மையான மனத்துடனேயே இருந்து கொண்டிருப்பவர். நீ செய்யும் தீய செயல்களுக்கு அவரைக் காரணம் சொல்லாதே. உன் தீய செயல்களுக்கு நீயே பொறுப்பு. வேதாந்தத்தை அரை குறையாகத் தெரிந்து கொள்வதும் ஆபத்தானதே. |
|
|
|