|
குருவிடம் வந்த சீடன், சுவாமி! கடவுளைக் காண விரும்புபவனின் குணாதிசயங்கள் எப்படி இருக்க வேண்டும்? எனக் கேட்டான். புன்னகைத்த குரு, நான் ஒருமுறை நதிக்கரையில் நின்றுகொண்டிருந்தேன். அப்போது நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்தது. நான் நதியிடம், இறைவன் படைப்பில் உனக்கு மிகுந்த ஆசிர்வாதம் இருக்கிறது. நீ மனிதர்களுக்கு மட்டுமன்றி சகல உயிரினங்களும்; மரம், தாவரம் போன்றவையும் வாழத் தேவையான நீரைத் தருகிறாய். மீன்கள் வசிப்பதற்கான உறைவிடத்தையும் உணவையும் தருகிறாய். எண்ணற்ற தொழில்கள் உன்னால்தான் வளம் பெறுகின்றன. உனக்கு நன்றி சொல்வதற்கு எங்களிடம் வார்த்தைகளே இல்லை! என்று சொன்னேன்.
அதற்கு நதி! என் ஆர்வமெல்லாம் மிக மிக வேகமாக கடலைச் சேர்ந்து, அதனுடன் ஒன்றாகக் கலக்க வேண்டும் என்பது மட்டுமே! அதற்காகவே நான் வேகமாகப் பாய்ந்து செல்கிறேன். அதைத் தவிர, இப்போது நீங்கள் என்னைப் பற்றி சொன்னதையெல்லாம் வெறும் செய்திகளாக மட்டுமே பார்க்கிறேன். என்று சொன்னது! கடவுளை அடைய விரும்புபவனின் குணமும் அந்த நதியைப் போலத்தான் இருக்க வேண்டும். அவனது ஆர்வமும் வேகமும் கடவுளை சென்றடைந்து, கடவுளோடு ஒன்றாய்க் கலக்க வேண்டும். என்பதாகவே இருக்க வேண்டும். அவ்வாறு அவன் இருந்தால் கடவுள் ஆசிர்வாதம் அவனுக்கு மட்டுமல்ல; அவனைச் சேர்ந்த அனைத்திற்கும் கிடைத்துவிடும்! என்றார். |
|
|
|