|
புத்தியில்லாத பிள்øளையை பெற்றுவிட்டோமே! படிக்கவே மாட்டேன் என்கிறானே! இவன் பிற்காலத்தில் எப்படி பிழைக்கப் போகிறான்! இவனுக்கு என்ன வேலை கிடைக்கப் போகிறது! ஏதாவது, தொழில் ஆரம்பித்துக் கொடுத்தால், அதையாவது தக்க வைத்துக் கொள்வானா என்று வருத்தப்படும் பெற்றோரா நீங்கள்! உங்களுக்கு மட்டும் பூர்வ புண்ணியம் இருந்து விட்டால் இதுபற்றி கவலை கொள்ளத் தேவையில்லை. ஒரு கதையைக் கேளுங்க!பதஞ்சலி முனிவர் ஆயிரம் விஷ நாக்கு கொண்ட ஆதிசேஷனின் அம்சமாவார். இவர், தனக்கு தெரிந்த பாடம் மற்றவர்களுக்கும் தெரிய வேண்டும் என ஆசைப்பட்டு ஆயிரம் மாணவர்களைத் தேர்ந்தெடுத்தார். தனது விஷ சக்தி மாணவர்களை தாக்கி விடும் என்பதால், ஒரு திரை போட்டு மறைத்து அதற்குள் அமர்ந்து கொண்டார்.மாணவர்களே! யாரும் திரையை விலக்கி என்னைப் பார்க்க முயற்சிக்கக் கூடாது.
அப்படி பார்த்தால் நீங்கள் விஷம் தாக்கி கருகி போவீர்கள். அதுபோல் நான் உள்ளிருக்கும் தைரியத்தில் என் அனுமதியின்றி யாரும் வெளியே போகக்கூடாது, என எச்சரிக்கை செய்தார். மாணவர்களும் குரு சொல் ஏற்றனர். ஒரு குறும்புக்கார மாணவன், திரையைத் திறந்து பார்த்தால் என்னதான் ஆகிறது என பார்ப்போமே என நினைத்து திறந்தான். அவ்வளவு தான்! ஆசிரியரின் விஷப்பார்வையில் ஒரே ஒருவனைத் தவிர மற்றவர்கள் கருகி விட்டனர். ஆசிரியர் சத்தம் கேட்டு வந்து பார்த்தார். பிள்ளைகள் கருகிக் கிடந்தனர். அப்போது, ஒரே ஒரு மாணவன் மட்டும் வெளியே இருந்து உள்ளே வந்தான். இந்த ஒரு பிள்ளையாவது தப்பித்தானே என மகிழ்ந்து, திரை மறைவுக்குள் சென்று, எங்கே போனாய், என்றார். அவன், ஆசிரியரின் அனுமதியின்றி வெளியில் சென்றதற்கு மன்னிப்பு கேட்டு, வகுப்புக்கு மட்டம் போட்ட விபரத்தை தெரிவித்தான்.
அவனை மன்னித்த பதஞ்சலி, அவனுக்கு மட்டும் பாடம் ஆரம்பித்தார். அவனோ சரியான மண்டு. அவனுக்கு பாடம் தலையில் ஏறாது என்பதைப் புரிந்து கொண்ட அவர், தனது தெய்வீக சக்தியைப் பயன்படுத்தி, தனக்கு தெரிந்த எல்லா வித்தையும் அவனுக்கும் தெரியட்டும் என்றார். குழந்தை ஒரே கணத்தில் ஞானியாகி விட்டான். இதைத்தான் யோகம் என்பார்கள். திறமை குறைந்தவனாக இருந்தாலும் கூட, நேரம் வந்து விட்டால் எதையும் தடுக்க முடியாது. பூர்வ ஜென்மபுண்ணியம் தான் இதற்கு காரணம். இதனால் தான் எப்போதும் புண்ணியச் செயல்களை செய்ய வேண்டும். நாலு பேருக்கு நல்லதைச் செய்தால் போதும். நம் பிள்ளைகளை ஏதோ ஒரு சக்தி வந்து காப்பாற்றும். நடராஜர் சன்னிதிகளில் பதஞ்சலி முனிவர் இருப்பார். அவரையும் வணங்கி, பிள்ளைகளுக்கு நல்ல புத்தியை வேண்டுங்கள். |
|
|
|