|
விவசாயி ஒருவர் காளியின் தீவிர பக்தர். அவரது முன்னோரும் காளி பக்தர்கள் என்பதால், விவசாயிக்கு காளி என்றே பெயர் வைத்திருந்தனர். தன்னிடம், துன்பத்தைச் சொல்லி உதவி கேட்டு வருபவர்களுக்கு அவர் காளி மந்திரம் ஜெபித்து திருநீறு கொடுப்பார். அந்த ஊரில் கோடீஸ்வரன் என்ற கருமி இருந்தான். அவனுடைய குழந்தை இரவில் துõங்காமல் அழுதது. பக்தரைப் பற்றிக் கேள்விப்பட்ட அவன், குழந்தையின் அழுகையை நிறுத்த திருநீறு பெற்றான். இதற்கு என்ன காணிக்கை வேண்டும்? என்றான். விரும்பியதை கொடுத்தால் போதும் என்றார் காளி. அவன் காசு கொடுத்து விட்டு கிளம்பினான். அன்றிரவு குழந்தை நன்றாக உறங்கியது. கோடீஸ்வரன் மனதிற்குள், இந்த ஆளை விவசாயின்னு சொன்னாங்களே! குழந்தை நிம்மதியா துõங்குறதைப் பாத்தா மந்திரவாதியா இருப்பாரோ.... என எண்ணினான்.மறுநாள் இரவு பக்தரின் வீட்டுக்குச் சென்றான். வயலுக்குச் சென்ற களைப்பில் அவர் அமர்ந்திருந்தார். அருகில் சென்று,சாமி... ரொம்ப நாளா ஒரு ஆசை. பெயருக்கேத்த மாதிரி கோடீஸ்வரனா வாழ ஆசைப்படறேன். நீங்க தான் வழி காட்டணும், என்றான். பக்தரும், அதுக்கென்ன.... ஆக்கிட்டா போச்சு என்றார். கோடீஸ்வரன், இப்பவே பணம் தரப் போறீங்களா..... என்று சிரித்தான்.
தந்திட்டா போச்சு. தினமும் பத்தாயிரம் ரூபா வாங்கிக்கோ. ஆனா, ஒரு நிபந்தனை என்று இழுத்தார் பக்தர். நிபந்தனையா..... என ஆவலுடன் என்ன சொல்லப்போகிறாரோ என கோடீஸ்வரன் நிமிர்ந்து உட்கார்ந்தான். தினமும் காளிக்கு நீங்க காணிக்கை கொடுக்கணும்..... முதல் நாளான இன்று ஒரு ரூபாய் கொடுங்க. நாளை இரண்டு ரூபாய். இதை இப்படியேதினமும் இரட்டிப்பா உயர்த்தி கொடுத்துக்கிட்டே இருக்கணும் என்றார் பக்தர்.கோடீஸ்வரன், ம்ம்... சரிங்க சாமி.. காளி மேல சத்தியமா இந்த காணிக்கையைத் தர்றேன் என்றான் வேகமாக. பக்தர் பத்தாயிரம் ரூபாயைக் கொடுத்து விட்டு, காணிக்கையாக ஒரு ரூபாய் பெற்றுக் கொண்டார். வீட்டிற்குப் போன கோடீஸ்வரனுக்கு சந்தேகம் எழுந்தது. பணம் எல்லாம் கள்ள நோட்டாக இருக்குமோ என்று எடுத்துப் பார்த்தான். சரியாக இருந்தது. ஒரு ரூபாய்க்கு பதிலா பத்தாயிரம் கொடுக்கிற இந்த ஆளு மடையனாத் தான் இருக்கணும் என்று சொல்லிக் கொண்டான்.
இரண்டாம் நாளும் பத்தாயிரத்தை பெற்றுக் கொண்டு இரட்டிப்பாக இரண்டு ரூபாய் காணிக்கை கொடுத்தான். கொடுக்கல், வாங்கல் தொடர்ந்தது.பத்தாம் நாள் பத்தாயிரத்தை பெற்றுக் கொண்டு, 512 ரூபாய் காணிக்கை அளித்தான். 15ம் நாள் வந்தது. பத்தாயிரத்தைப் பெற்றுக் கொண்டவன், காணிக்கையாக 16,576 ரூபாய் கொடுக்க நேர்ந்தது.இப்போது தான் கோடீஸ்வரனுக்கு விபரீதம் புரிந்தது. இப்படியே, இன்னும் இரண்டு, மூன்று நாள் போனாலே, தான் வாங்கும் 2 லட்சத்துக்கும் மேலாக காணிக்கை செலுத்த வேண்டி வருமே என்று தவித்தான். விடிந்ததும் பக்தரின் வீட்டுக்கு ஓடினான். சாமி.... என்னை மன்னிச்சிடுங்க! விபரம் தெரியாம காளிக்கு காணிக்கை தர்றதா சத்தியம் பண்ணிட்டேன், என்று அழுதான். பக்தர், பக்தி செய்தால் மட்டும் பணம் கொட்டிடுமா.... உழைக்காம யாரும் உயர முடியாது. இனியாச்சும் உழைச்சு வாழப் பழகு. காளியம்மா ஒரு போதும் உன்னை கைவிட மாட்டா! என்றார். வாங்கிய பணத்தை எல்லாம் விவசாயியிடம் திரும்பக் கொடுத்த கோடீஸ்வரன் உழைத்து வாழ முடிவெடுத்தான்.
|
|
|
|