|
பரம்பு நாட்டை ஆண்ட வள்ளல் பாரி, படர்வதற்கு பந்தல் இல்லாமல் பூங்கொடி வாடியது கண்டு, தன் தேரையே பந்தலாக நிறுத்தினான். அவனது வள்ளல் குணத்தை உலகமே பாராட்டியது. சிற்றரசனான பாரி புகழ் பெறுவதைக் கேள்விப்பட்ட சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் பொறாமை கொண்டனர். தந்திரமாக அவனைக் கொன்றனர். இதன் பின், பாரியின் மகள்களான அங்கவை, சங்கவை அநாதை ஆயினர். ஒருநாள் காட்டுவழியில் வந்து கொண்டிருந்த அவ்வையார் அவர்களைச் சந்தித்தார். பருவ வயதை அடைந்தும், இருவரும் திருமணமாகாமல் இருப்பது கண்டு வருந்தினார். மாப்பிள்ளையைத் தேடும் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். சிற்றரசன் ஒருவனை மணமகனாகத் தேர்ந்தெடுத்து, திருமணத்திற்கு நாள் குறித்தார். மண ஓலையை மூவேந்தருக்கும் அனுப்பினார். கல்வியில் சிறந்த அவ்வையாரை, மூவேந்தர்களாலும் புறக்கணிக்க முடியவில்லை. மூவரும் ஒன்று சேர்ந்து திருமணத்திற்கு வந்ததைக் கண்ட அவ்வையார் அந்தணர் வளர்க்கும் முத்தீ போல மூவரும் இங்கு ஒன்று கூடிவிட்டீர் என்று ஒரு பாடலைப் பாடினார். பாராளும் வேந்தரும் அவரது பாட்டுக்கு அடிமை என்று மக்கள் அவரைப் போற்றினர்.
|
|
|
|