Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » புதிய கோவில் எப்படி கட்ட முடியும்?
 
பக்தி கதைகள்
புதிய கோவில் எப்படி கட்ட முடியும்?

ஒரு ஊரில் பாழடைந்த கோவில் இருந்தது. அது எப்போது கட்டப்பட்டது? என்று யாருக்கும் தெரியாது. எந்த நேரத்திலும் இடிந்து விழுந்துவிடும் என்ற நிலையில் இருந்தது. அச்சம் காரணமாக, அந்தக்  கோவிலுக்குச் செல்வதை அறவே நிறுத்தி விட்டனர் மக்கள். கோவில் வழியாக மக்கள் செல்ல நேர்ந்தால், வேகமாக நடந்து அந்த இடத்தைக் கடப்பது வழக்கம். அதற்கு, நம் மீது கோவில் இடிந்து விழுவதற்குள், அந்த இடத்தைக் கடக்கவேண்டும் என்று நினைத்தது தான் காரணம். அந்த ஊர் பெரியவர்கள் சிலர், கோவிலின் முன்னேற்றத்தின் பொருட்டு, ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தார்கள். ஒரு நாள் அது பற்றி கலந்தாலோசிப்பதற்கு ஓர் இடத்தில் கூடினார்கள். அவர்கள் நடத்திய அந்த ஆலோசனை கூட்டம், கோவிலுக்குள் நடைபெறவில்லை. கோவிலுக்குள் கூட்டம் நடைபெறும் சமயத்தில், தங்கள் மீது கோவில் இடிந்து விழுந்து விட்டால் என்ன செய்வது? என்று அவர்கள் பயந்தது தான் காரணம். எனவே கோவிலுக்குச் சற்று தூரத்தில் தான் அவர்கள் கூடிப் பேசினார்கள்.

ஆலோசனை கூட்டத்தில், கோவிலில் மிகவும் மோசமாக இருக்கும் பகுதிகளைச் செப்பனிட வேண்டும்.வெளிச்சுவருக்குச் சுண்ணாம்பு அடிக்க வேண்டும் என்று முடிவு செய்தார்கள். அதன்படி, கோவிலின் சில பகுதிகள் செப்பனிடப் பட்டன. சுவருக்கு வெள்ளையடிக்கப்பட்டது. ஆனால், அப்படி செய்த பிறகும் கூட, சிலர் மட்டும் சில நாட்களுக்குக் கோவிலுக்குச் சென்றார்கள். பிறகு அதுவும் நின்று போயிற்று.எனவே மீண்டும் நிர்வாகிகள் ஒன்று கூடி ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்கள். கோவிலுக்குச் சற்று துõரத்தில் நடந்த அந்தக் கூட்டத்தில், அவர்கள் அனைவரும் கலந்து பேசி, நான்கு தீர்மானங்களை ஒருமனதாக நிறைவேற்றினார்கள்.முதலாவது தீர்மானம்: இந்தக் கோவில் மிகவும் பழமை வாய்ந்தது. பழமையான இந்தக் கோயிலை இடிக்க வேண்டியிருக்கிறதே என்று நினைக்கும்போது, எங்கள் மனம் மிகவும் வருந்தத்தான் செய்கிறது. என்றாலும், கோயிலின் நலன் கருதி அதை இடிக்க முடிவு செய்கிறோம். இரண்டாவது தீர்மானம்: இந்தப் பழைய கோவிலுக்குப் பதிலாக, கூடிய விரைவில் வேறு ஒரு புதிய கோவில் கட்ட இருக்கிறோம்.

மூன்றாவது தீர்மானம்: கோவிலிலுள்ள பழைய கதவுகள், செங்கற்கள் ஆகியவற்றைக் கட்ட விருக்கும் புதிய கோவிலுக்குப் பயன்படுத்த வேண்டும். பழைய கோவிலை இடித்த பிறகு, அஸ்திவாரத்தை மட்டும் அப்படியே வைத்துக்கொண்டு, அதே இடத்தில் முன்பு பழைய கோவில் இருந்தது போன்ற அதே அமைப்பில் புதிய கோவில் எழுப்ப இருக்கிறோம்.இந்த மூன்று தீர்மானங்களையும் நிறைவேற்றிய பிறகு, நான்காவதாக ஒரு வேடிக்கையான தீர்மானத்தை அவர்கள் நிறைவேற்றினார்கள். அந்த நான்காவது தீர்மானம் இதுதான். வேறு ஒரு புதிய கோவிலைக் கட்டும் வரையில், இந்தப் பழைய கோவிலை இடிக்காமல் அப்படியே வைத்திருக்கப் போகிறோம். இந்த நான்காவது தீர்மானம் எப்படியிருக்கிறது, பாருங்கள்? பழைய கோவிலை இடிக்காமல், அதே இடத்தில் புதிதாக எப்படி ஒரு கோவில் எழுப்ப முடியும்? இந்தக் கோவில் நிர்வாகிகள் எடுத்த முடிவைப் போன்றுதான், இந்த உலகில் நம்மில் பலரும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.வாழ்க்கையில் உயர வேண்டும் என்று நாம் நினைக்கிறோம். ஆனால், அவ்விதம் நாம் வாழ்க்கையில் உயர்வதற்கு எது முட்டுக்கட்டையாக இருக்கிறதோ, எது இடையூறாக இருக்கிறதோ, அதிலிருந்து விடுபடுவதற்கு நாம் எந்த முயற்சியும் செய்யாமல் இருக்கிறோம்.பலரும், நல்ல உடல் ஆரோக்கியம் வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால், அதே சமயம், நல்ல உடல்ஆரோக்கியத்திற்கு இடையூறாக இருக்கும் தீய பழக்கங்களை எல்லாம் விடாமல் பிடித்துக் கொண்டிருப்பார்கள். மாணவர்கள் தங்களுடைய திறமைகளை வளர்த்துக் கொள்வதற்கு, எத்தனையோ வாய்ப்புகள் இருக்கின்றன.

ஆனால், அவற்றை எல்லா மாணவர்களும் பயன்படுத்துகிறார்களா என்றால் அதுதான் இல்லை.பலரும் நேரத்தை வீணாக்கக் கூடாது என்று நினைக்கிறார்கள். ஆனால், அதே சமயம், அவர்கள் தேவையற்ற தொலைக்காட்சித் தொடர்களைப் பார்ப்பது போன்ற பயனற்ற செயல்களை விட்டு விடவும் தயாராக இல்லை. நல்ல பழக்கங்கள் தங்களிடம் இருக்க வேண்டும் என்று எண்ணுகிறார்கள். அதே சமயம், அவர்களுக்குத் தங்களிடமுள்ள தீய பழக்கங்களை விட மனம் வராது. ஒரு மொழியில் அல்லது கலையில் நல்ல தேர்ச்சி பெற வேண்டும் தலைசிறந்து விளங்க வேண்டும் என்று நினைப்பார்கள். அவ்விதம் நினைக்கும் அதே சமயத்தில், அவர்கள் அதற்கு உரியவர்களை அணுகி உரிய பயிற்சியையும், உழைப்பையும் மேற்கொள்ள மாட்டார்கள்.நோயாளிகளுக்கு, ஒழுங்காகப் பத்தியம் இருந்து மருந்து சாப்பிட்டால், தங்கள் நோய் குணமாகும் என்று தெரியும். ஆனால், அதை அவர்கள் செய்யமாட்டார்கள்.உணவில் கட்டுப்பாடுடன் இருப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்ற உண்மை அனைவருக்கும் தெரியும். உடல் ஆரோக்கியத்தை விரும்பும் அதே சமயத்தில், பலர் நாவின் சுவைக்கு ஆசைப்பட்டு உடல் நலத்தைக் கெடுத்துக் கொள்வார்கள். வாழ்க்கையில் நாம் உயர்வு பெறுவதற்கு, முட்டுக்கட்டையாக உள்ள தீயவற்றை விட்டொழிக்க வேண்டும் என்பது இந்தக் கதையின் கருத்து. - இன்னும் கேட்போம்


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar