|
பகவான் ஸ்ரீகிருஷ்ணர் தன்னம்பிக்கையையும், சுயமுயற்சியையும் தியானத்துக்குரிய பஹிரங்க ஸாதனைகளாகக் கூறுகிறார்.
உத்தரேதாத்மநாத்மாநம் நாத்மாநமவஸாதயேத் ஆத்மைவ ஹ்யாத்மநோ பந்து: ஆத்மைவ ரிபுராத்மந:
(ஸ்ரீமத் பகவத்கீதை 6-5)
ஒருவன் எப்பொழுதும் தன்னைத் தான் உயர்த்திக் கொள்ள வேண்டும். தன்னைத் தாழ்த்திக் கொள்ளக்கூடாது. ஏனெனில், தானே தனக்கு நண்பன், தானே தனக்கு எதிரி. இறையருளால் ஆன்மிக வாழ்வில் முன்னேற முற்படும்போது குருவின் துணையோடு கூடிய மெய்யறிவு நூல். ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டும். அதற்கு குருவருளும், சாஸ்த்ர அருளும் தேவை. ஆன்மிக வாழ்வில் பல்வேறு தடைகள் தோன்றும். குருவருளால், சாஸ்த்ரங்களின் அருளால் மெய்யறிவைப் பெற்ற பிறகு, நிதித்யாஸனம் என்ற நிலைக்கு வந்த பிறகு, வேறு எவ்வித தடைகளும் இல்லை. தானே தனக்குத் தடை; தானே தனக்கு உதவி. ஆன்மீக வாழ்வில் முன்னேற வேண்டுமானால், பொறுப்பேற்றுக்கொள்ளத் தயங்கக் கூடாது. சிலர் அதற்கான சரியான வேளை வரவில்லை; உத்தரவு கிடைக்கவில்லை என்று சாக்கு போக்குகள் கூறிக் கொண்டிருப்பர்.
வேறு சிலர் குரு தன்னைத் தேடி வர வேண்டும் என்று காத்திருப்பர். முயற்சியின் முக்கியத்துவத்தை, பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை பகவான் இந்த ச்லோகத்தில் மிக அழகாக உணர்த்துகிறார். குருவானவர் அன்பையும் அறிவையும் வாரி வழங்குகிறார். ஆனால், பெற்ற அறிவை ஆழ்ந்த உள்ளத்துக்கு எடுத்துச் செல்லும் பயிற்சியாகிய நிதித்யாஸனத்தை மேற்கொள்ளும் போது, அதற்கு குருநாதர் உதவ முடியாது. அது சுயமுயற்சியினால் மட்டுமே நிகழ வேண்டும். அதற்கு ஆத்மக்ருபா எனப்படும் தனது மனதின் அருள் வேண்டும். மனம் என்ற கருவியைக் கையாளுவதில் மிகுந்த சிக்கல் இருக்கிறது. ஓடுகின்ற நீராய், உணர்ச்சி பிரவாகமாய் இருக்கின்ற மனதில் பலவிதமான எண்ணங்கள் கணந்தோறும் தோன்றி மறைகின்றன.
மனதை நண்பனாக்கிக் கொள்ளப் பழக வேண்டும். மனதைக் காயப்படுத்தி எதையும் சாதித்து விட முடியாது. குற்ற உணர்ச்சியிலும் வேதனையிலும் தவிக்கும் மனதால் தியானத்தில் ஈடுபடுவது மிகக் கடினம். மனதைக் கையாளுவது எளிதல்ல. தாழ்வு மனப்பான்மையை, தன்னைக் குறித்த கீழான மதிப்பீடுகளை நீக்கி, தன்னம்பிக்கையோடு இடையறாது தியானத்தில் ஈடுபட முயற்சிக்க வேண்டும். சீடனாக இருக்கும்போது, பணிவு என்ற நற்பண்பை வளர்த்துக்கொள்வோம். ஆனால் அதுவே அதிகமாகும் போது, தான் தொண்டனுக்கும் தொண்டன் என்ற எண்ணம் வளர்ந்து, அது தாழ்வு மனப்பான்மையாக மாறிவிடக் கூடும். சாஸ்த்ரங்களை குருவிடமிருந்து முறையாகக் கேட்டும், மெய்யறிவை உணர முடியாமல் போய்விடும்.
தியானம் என்பது தனிமையில் செய்ய வேண்டிய ஒரு ஸாதனை அதில் தானே தனக்கு நண்பன், தன்னைத் தவிர வேறு ஒருவரும் அங்கில்லை. எனவே, தன்னைத் தான் உயர்த்திக்கொள்ள வேண்டும். குறிக்கோளை அடைவதற்கு தான் மட்டுமே பொறுப்பு என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும். கவனக்குறைவால் தாழ்வு மனப்பான்மையில் விழுந்துவிடக்கூடாது. தெளிந்த மெய்யறிவோடு, பக்குவத்தோடு தனிமையில் இருப்பவனுக்கு அவனது மனமே நண்பன், தெளிவான புத்தியில்லாமல், போதிய பக்குவமின்றி தனிமையில் இருந்தால், அவனது மனமே அவனுக்குப் பகைவனாகிவிடும்.
|
|
|
|