|
பாண்டிய மன்னன் ஒருவன், புலவர்கள் மற்றும் சான்றோர்களின் தமிழ் அமுதத்தை சுவைக்கவும், அவர்களின் பெருமையை, உலகிற்கு உணர்த்தி, அவர்களை கவுரவப்படுத்தவும் விரும்பினான். அதன் காரணமாக, அரண்மனை முற்றத்தில், நான்கு சங்கிலிகளால் பிணைக்கப்பட்ட பொன் ஊஞ்சலை கட்டித் தொங்க விட்டு, அதில், பொற்குவியலையும் வைத்தான். பின், ‘புலவர்களும், தமிழ் அறிஞர்களும் ஊஞ்சல் முன் நின்று பாட வேண்டும். யாருடைய பாட்டை கேட்டதும், ஊஞ்சல் அறுந்து விழுகிறதோ; அவர்களுக்கு, இதிலுள்ள பொற்குவியல் பரிசாக அளிக்கப்படும்...’ என்ற அறிவிப்பு பலகையை அருகில் வைத்தான். இச்செய்தி, காட்டுத் தீ போல, எட்டு திக்கும் பரவியது. ஒவ்வொருவரும், தனக்கே பொற்குவியல் கிடைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் பாடினர்; ஆனால், ஊஞ்சலின் சங்கிலிகளோ அறுபடவில்லை. நாட்கள் சென்றன; ஒருநாள், மன்னனை காண வந்திருந்த அவ்வையார், மன்னனின் அறிவிப்பை அறிந்து, முற்றத்தை அடைந்தார். ஊஞ்சல் முன் நின்று, மடை திறந்தாற் போன்று, அழகு தமிழில், வெண்பாக்களை பாட ஆரம்பித்தார். ‘ஆர்த்த சபை...’ என துவங்கி, ‘என்று ஆறு...’ என முடியும் முதல் வெண்பாவை பாடியதும், ஊஞ்சலின் ஒரு பக்கத்து சங்கிலி, ‘படீர்’ என, பலத்த சப்தத்துடன் அறுந்தது. ‘என்று அறு...’ என முடியும் மேலும் மூன்று வெண்பாக்களை பாடியதும், இதர மூன்று சங்கிலிகளும், ஒன்றன் பின் ஒன்றாக அறுந்தது, ஊஞ்சலும், பொற்குவியலும் அவ்வையார் முன் விழுந்தது. அவ்வையாரின், தமிழ் புலமையை கண்ட மன்னன் வியந்து, அவரை பணிந்து வணங்கினான். மற்றவர்கள் எல்லாம் பரிசை அடைய வேண்டும் என்பதற்காகவே பாடினர்; ஆனால், அவ்வையாரோ, தமிழின் சிறப்பை வெளிப்படுத்துவதற்காகவே பாடினார். அதனால், ஊஞ்சல் அறுந்து விழுந்தது. பரிசாக வந்த பொற்குவியலை, வறுமையில் வாடிய புலவர்களுக்கு, பிரித்து கொடுத்து மகிழ்ந்தார் அவ்வையார்.
|
|
|
|